April 18, 2024

சம்பந்தன் இருக்கும் வரை சுமந்திரனும் இருப்பார்!“

சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக மாறியுள்ளது. தமிழரசுக் கட்சியின்
முன்னாள் எம்.பி.க்களான வி.தர்மலிங்கம், மு.ஆலாலசுந்தரம் ஆகியோரை செல்வம் அடைக்கலநாதனின் ரெலோ அமைப்பே கொலை செய்தனரென்றும், விடுதலைப் புலிகளை அழிப்பதில் சிங்கள ராணுவத்துடன் புளொட் அமைப்பின் சித்தார்த்தன் இணைந்து பங்காற்றினார் என்றும் வெளிவந்துள்ள தகவல்கள், சுமந்திரன் மீதான கேள்விகளை மடக்கி அவர் மீதான நடவடிக்கைகளை முடக்கிவிடும் வலிமை பெற்றால் ஆச்சரியப்பட நேராது.

அரசியலில் பிரசித்தமாகவும், மக்கள் மத்தியில் பிரபல்யமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கு அத்திவாரமாகவும் இருக்க ஊடகங்களில் தங்கள் பெயர் அடிக்கடி வெளிவர வேண்டுமென பொதுவாக ஒவ்வொரு அரசியல்வாதியும் விரும்புவர்.

பல அரசியல்வாதிகள் தங்கள் சேவைகளைப் புகழாரம் சூட்டும் செய்திகளே ஊடகங்களில் வெளிவர வேண்டுமென விரும்பி அதற்கென ஆலாய்ப்பறப்பர்.

ஆனால், சிலருக்கு மட்டுமே உண்மையான தந்திரம் தெரியும். ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளாகி, எதிர்மறையான கருத்துகளால் அடி வாங்கினால் மட்டுமே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படலாம், அதுவே அரசியலுக்கான உரம் என்பதை அறிந்தவர்களில் முதன்மையானவராக இலங்கை அரசியலில் இருந்தவர் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க.

அவரது வாரிசாக இன்றைய அரசியலில் பார்க்கப்படக்கூடியவர் மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. என்ற முன்னுரையுடன் இக்கட்டுரையை ஆரம்பிப்பது சாலப்பொருத்தமாக இருக்கும்.

கொரோனா நெருக்குவாரம் கடந்த பல வாரங்களாக சகல ஊடகங்களையும் ஆக்கிரமிக்கின்றன. இதில் தமிழ் ஊடகங்கள் விதிவிலக்கில்லை.

இந்த வாரம் முள்ளிவாய்க்காலுக்குரியது. கொரோனா தொற்றும், ஊரடங்கு அமுலும் முள்ளிவாய்க்காலை வழமைபோல திரண்டு நினைவு கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், சுமந்திரனின் சிங்கள ஊடகச் செவ்வி (அவர் நினைத்ததுபோல) பல சர்ச்சைகளை ஏற்படுத்தி தமிழ் ஊடகங்களை அவர் பக்கம் திசைதிருப்பி வைத்துள்ளது.

தமிழரின் முப்பதாண்டு கால இனவிடுதலைப் போராட்டத்தில் அதியுச்ச தியாகங்களைப் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் வகையில் சுமந்திரன் கருத்துகளைக் கூறலாமா? அதுவும் விடுதலைப் புலிகளால் உருவாக்கி வளர்க்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளராக இருந்துகொண்டு இவ்வாறு அவர் கூறலாமா என்பதுதான் எழுந்துள்ள தலையாய பிரச்சனை.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஒருபோதும் ஏற்கவில்லையென்றும், அதனை ஏற்கப்போவதில்லையென்றும் சுமந்திரன் கூறியிருப்பதை ஏற்க முடியாது என்பதே இதுதொடர்பாகக் கருத்து வெளியிட்ட பெரும்பாலானோரின் ஏகோபித்த கருத்து.

சிங்கள மொழியிலான இந்தச் செவ்வியில் கேட்கப்பட்ட இரு முக்கிய கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே அப்படியே தரப்படுகிறது:

கேள்வி: நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: இல்லை. நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை?
பதில்: நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன். ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்லுகிறேன். அதனால் எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் எங்களுக்காகத்தானே போராடினார்கள், ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள் இல்லையென்று என்னோடு முரண்படுகிறார்கள். அதற்குக் காரணம் நான் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்ல என்பதுதான்.

இதற்குமேல் இவ்விடயத்துக்கு பொழிப்புரை தேவையில்லையென நினைக்கிறேன்.

சுமந்திரனின் பதிலை ஆட்சேபித்து முதலாவதாக அறிக்கை விட்டவர் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஆயுதப்போராட்டத்தினூடாக. அந்தவகையில் கூட்டமைப்பில் இருந்துகொண்டு அந்தப் போராட்டத்துக்கு எதிரான கருத்தை சுமந்திரன் கூறியது தவறு என்று தெரிவித்ததோடு, இதற்காக சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென அடைக்கலநாதன் கேட்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் எம்.பி. சிறீநேசன் கருத்து வெளியிடுகையில் தமிழ் இளைஞர்கள் விளையாட்டுக்காகவோ ஆசைக்காகவோ ஆயுதம் ஏந்தவில்லையென சுமந்திரனுக்குத் தெரிவித்தார்.

சிங்கள தேசியத்துக்குள் வாழ்ந்த சுமந்திரனுக்கு தமிழ் தேசிய சிந்தனை எப்படி வரும் எனக் கேள்வியெழுப்பினார் மற்றொரு முன்னாள் எம்.பி.யான சீ.யோகேஸ்வரன். வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஒருபடி மேலே போய், தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் எப்படி இதுகாறும் எம்.பி.யாக இருந்திருக்க முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், பா.அரியநேந்திரன் உட்பட கூட்டமைப்பின் பல பிரமுகர்கள் சுமந்திரனைக் கண்டிக்கும் அறிக்கைகளை விட்டதுடன் அவரை கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமெனவும் கோரினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கண்டன அறிக்கைகள் விடத்தவறவில்லை.

ஆயுதப்போராட்டம் தவறென்று சுமந்திரன் கூறியதைத் தவறென கண்டித்த புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், சிறுவயது முதல் அவர் கொழும்பில் வசித்ததால் தமிழரின் அரசியல் போக்கை சரியாக அறிந்திருக்கவில்லையென்று ஒருவகைச் சமாளிப்பு அறிக்கையை வெளியிட்டார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி விடுத்த அறிக்கையில், எங்கள் தியாகங்களின் அர்ப்பணிப்புகளில் ஏறி நின்று பகடை ஆடும் கபடத்தை கூட்டமைப்பு தனது ஊடகப் பேச்சாளருக்கு வழங்கப்போகிறதா என்று வினா தொடுத்திருந்தார்.

தமிழரசு கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவின் அறிக்கை குதர்க்கமானது என்றே கூற வேண்டும். சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்லவென்றும், அவரது தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டதோடு விரைவில் கூட்டமைப்புத் தலைமை ஒன்றுகூடி மேற்கொண்டு இது தொடர்பான தீர்மானங்களை எடுக்குமென வழமையான பாணியில் தெரிவித்திருந்தார்.

சுமந்திரன் கூறியதை அவரது தனிப்பட்ட கருத்து என்றே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இது உண்மையானால் கூட்டமைப்பின் தலைவர் பற்றியும், கூட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் சுமந்திரன் அச்செவ்வியில் எதனையும் தெரிவித்திருக்கக் கூடாதென்பதை இவர்கள் ஏனோ மறந்துவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக சில கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.