März 28, 2024

எதிர்பார்ப்பு நனவாகுமா?சசிகலா ரவிராஜ்!

இலங்கை வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வில் ஆறாத ரணமாக இரத்தக் கறையை பதித்து விட்டுச் சென்ற துயர தினமாக மே 18 ஆம் திகதி விளங்குகிறது.போரின் இறுதிக் கட்டத்தில் கொத்துக் கொத்தாக அப்பாவித் தமிழர்கள் பலியெடுக்கப்பட்ட நாள் அது.
எமது மக்களிற்கு பலியெடுப்பிற்கு நீதி கிடைப்பதுடன் அவர்களது அன்றாட பிரச்சினைகள் பலவற்றிற்கும் தீர்வு காணவேண்டுமென தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் சசிகலா ரவிராஜ்

இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்
இந்த 11 வருடங்களில் முள்ளிவாய்க்கால் அவலங்களை எதிர்கொண்ட மக்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா? வதிவிடம் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா? அவர்களது பொளாதார மேம்பாட்டிற்கு செய்யப்பட்ட ஊக்குவிப்புகள் என்ன? அவை திருப்திகரமானவையா?
முக்கியமாக பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களில் அல்லது பெண்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றனவா?
அங்கங்களை இழந்த உறவுகளுக்கு தமது நாளாந்த கடமைகளை மேற்கொள்ளும் வகையில் ஓரளவுக்கேனும் தொழிநுட்பம் சார்ந்த வசதிகள் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
இவற்றுக்கு நாம் பதில் கொடுப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட எம் மக்களின் மனங்களை ஓரளவேனும் ஆற்றுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் முல்லைத் தீவு மாவட்டத்தின் கிழக்கே, கடற்கரை கிராமமான முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் நிறைவு பெற்ற ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தாண்டவத்தில் பலியான எம் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டிலும் மே 18 ஆம் திகதி, நாம் அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த வருடம் இத்தினம், உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பீதிக்கு மத்தியில் வருகின்றது. எனினும் எம் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டு, மண்ணோடு மண்ணாகிய இந்நாளில் அவர்களை நினைவு கூருவது நம் எல்லோரதும் இதயபூர்வ கடமையாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலை, சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர இனப்படுகொலை நிகழ்வாக நோக்கப்படுகின்றது.
மே 18 ஆம் திகதி என்பது இலங்கையில் வாழும் எம்;மை மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் வாழும் எமது உறவுகளின் இதயங்களையும் கீறி ரணப்படுத்திய துயரமிக்க நாளாக வரலாற்றில் தடம் பதித்துச் சென்றுள்ளது.
பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர்கள் என்ற பாரபட்சம் இன்றி அனைவரையும் பலி கொண்டது இந்நாள்.
போர் விதிகளின் பிரகாரம் பாதுகாக்கப்பட வேண்டியவையாகவுள்ள, பாடசாலைகள் மருத்துவமனைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் என்பன மீது சரமாரியாக குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அவ்விடங்களில் தஞ்சமடைந்து தம் உயிரைப்பாதுகாத்து கொள்ளச் சென்ற பெருந்தொகை மக்கள் பரிதாபகரமாக மடிந்தார்கள்.
கணவரை இழந்த மனைவிமாரும் மனைவியரை இழந்த கணவன்மாரும், பிள்ளைகளை இழந்த பெற்றோரும் பெற்றோரை இழந்த பிள்ளைகளும் என சகல குடும்பங்களும் நிர்கதியாகின.
இந்த இறுதிக்கட்ட போரில் தமக்கு நடந்த கொடூரங்களுக்கு நீதி கிடைக்காதா என்பதே உடமைகளையும் உறவுகளையும் இழந்து நடைப்பிணம் போன்று வாழும் எம் மக்கள் மனங்களின் ஏக்கமாகும்.
நீதி கிடைத்தால் மட்டும் போதுமா? இந்த 11 வருடங்களில் அவர்களது அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டனவா? வதிவிடம் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டனவா? அவர்களது பொளாதார மேம்பாட்டிற்கு செய்யப்பட்ட ஊக்குவிப்புகள் என்ன? அவை திருப்திகரமானவையா?
முக்கியமாக பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களில் அல்லது பெண்களுக்கு போதிய பாதுகாப்புச் சூழல் காணப்படுகின்றனவா?
அங்கங்களை இழந்த உறவுகளுக்கு தமது நாளாந்த கடமைகளை மேற்கொள்ளும் வகையில் ஓரளவுக்கேனும் தொழிநுட்பம் சார்ந்த வசதிகள் பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
இவற்றுக்கு நாம் பதில் கொடுப்பதன் மூலமே பாதிக்கப்பட்ட எம் மக்களின் மனங்களை ஓரளவேனும் ஆற்றுப்படுத்த முடியும் என சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.