April 19, 2024

கவிஞர் ரி.தயாநிதி பொருளுணர்வீர்.

எங்கள் எண்ணங்கள்
உங்கள் மனங்களுக்கு
திணிக்கும் தீர்வல்ல.
உள்ளுணர்வின் உறுத்தல்களே.
எழுததுக்கான
தேய்மானம் நேரத்திலில்லை.
கருத்துக்களின் தேடலுக்கான
சிரத்தை கனதியில்லையா..
எதுகை வேண்டும்
மோனை வேண்டும்
நோப்படா வார்த்தை வேண்டும்
நேர்த்தியும் வேண்டும்.
வருட வேண்டும்
நெருட வேண்டும்
நெகிழ வேண்டும்
புழுகவும் வேண்டும்..
தனிமை வேண்டும்
தனித்துவம் வேண்டும்
தன்னடக்கம் வேண்டும்
தமிழ் செறிவும் வேண்டு்ம்.
இத்தனை சுமைகளை
சுகமாக சுமக்க வேண்டும்
படைப்பினை அனுப்பி
பார்த்தவர் சுவையறிய வேண்டும்..
படியா பாமரராய்
கட்டை விரல் உயர்த்தி
கை நாட்டு போட்டு
நகரும் நாகரீகம் வலி..
பார்த்தியளோ படிச்சனியளோ
துடிச்சியளோ துவண்டியளோ
வெடிச்சு சிதறும் சிந்தனை
நடுத்தெரு நாட்டியமாகிடலாமோ.
கேட்டமோ என்ற உங்கள்
உட் குரல் கேட்காமலில்லை.
கேட்டாலும் விடாமலி்ல்லை
பட்டறிவி்ன் பதிலிது..
ஓட்டு கேட்கும்
வேட்பாளரும் மதம்
மாற்றும் மத பிரசங்கிகளும்
கதவுகளை தட்டுவது போல்….
தட்டிக் காெண்டேயிருப்போம்.
வெட்ட வெளியில் திறந்தபடி
முகநூல் சுற்றங்களின் முற்றத்தில்
எங்கள் முற்றுகை தொடரும்..
காகம் தன் கரைதலை
மாற்றியதில்லை..
ஒற்றுமைக்கு குந்தகம்
விளைவித்ததுமில்லை
கா கா தமிழ் காகம் நாம்..
கவிஞர் ரி.தயாநிதி