April 18, 2024

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

தமிழீழ விடுதலைப்புலிகளை முன்னுதாரணம் காட்டி புகழாரம் சூடிய கோட்டாபயவின் கட்சி முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்காவில் தற்போதைய எதிர்க் கட்சிகளிடத்தில் இல்லாத மனிதாபிமானத்துடனான, நற்பண்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்தில் காணப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல புகழாரம் சூட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு தன்னால் நன்சான்றிதழை வழங்கமுடியாது எனவும் எவ்வாறெனினும், கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது விடுதலைப் புலிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பில், அவர் கண்டியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது நாட்டு மக்கள் மிகவும் இலகு மனம் கொண்டவர்கள். சுனாமி அழிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் பொருட்கள் இருக்கவில்லை. அப்போது சிறுபிள்ளைகள் கூட தங்களால் இயன்றவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்துதவினார்கள். ஆடைகளைக்கூட தானம் செய்தார்கள்.

இந்நிலையில் தான் தற்சமயம் அரசாங்கத்திற்கு உதவுமாறு அரச ஊழியர்களிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலாத்காரமல்ல, அவர்களால் முடியுமான உதவியை ஊழியர்கள் செய்யலாம். தற்போதைய எதிர்கட்சி செய்கின்ற செயற்பாடுகளைப் பார்த்தால், அவர்களை விட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னுதாரணமாக நடந்துகொண்டார்கள் என்றே கூறவேண்டும்.

அதற்காக நான் விடுதலைப் புலிகளுக்கு நற்சான்றிதழ் அளிப்பதாக எண்ணிவிட வேண்டாம். வடக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்குப் படையினர் அங்கு சென்ற போது அவர்கள் மீது விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் பாவிக்கவில்லை. எமது படையினர் அங்கு தமிழ் மக்களுக்கு உதவி செய்யவே சென்றார்கள். அந்த சேவைக்கு விடுதலைப் புலிகள் கௌரவம் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட அந்த நற்பண்புகூட இன்றைய எதிர்கட்சியினருக்கு இல்லை என்பதே கவலை.

இதேவேளை, கொழும்பில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித்த அபேகுணவர்தன, வெளிநாடுகளால் அறிவிக்கப்பட்ட எந்தவொரு உதவி நிதியும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

எனினும் இந்தக் கூற்றை இன்றைய தினம் நிராகரித்த அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, 122 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாக கிடைத்திருப்பதாக நிதியமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி தெரிவித்தார்.

மேலும் நிவாரண உதவிப் பணம் இன்னும் வந்துசேரவில்லை என்று யார் கூறியது? நிதியமைச்சின் செயலாளர்கூட, 122 டொலர் மில்லியன் ரூபா கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். சாதாரண தேவைகளுக்கு ஏற்கனவே நிவாரண உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஆகவேதான் இன்று கொரோனா பரிசோதனைகளும் பன்மடங்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு அரச ஊழியர்களிடத்தில் ஏன் அரசாங்கம் சம்பளத்தைக் கோருகிறது என்று கேட்டால், நாடு வீழ்ந்திருக்கும் குழியிலிருந்து மீண்டு எழுவதற்காக இருந்தால் வெறும் நன்கொடைகளால் செய்துவிட முடியாது.