April 20, 2024

நாளை முதல் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் – ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை, ஏப்ரல் 6 ஆந் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். நேரடி வங்கி வைப்புக்குக் பதிவு செய்தவர்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து 3 முதல் 5 நாட்களுக்குள் பணம் வழங்கப்படுவதுடன், ஏனையோருக்குப் 10 நாட்களுக்குள் காசோலை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பிக்கவுள்ளோர் Canada.ca/Coronavirus என்ற இணையத் தள முகவரியில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நெருக்கடியான வேளையில் கனேடியர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவதைப் பாராட்டிய பிரதம மந்திரி ட்ரூடோ, சவால்களை எதிர்கொள்வதற்கு முன்வந்துள்ள வணிக நிறுவனங்கள், உதவி புரிவதற்காக மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ஓய்வுபெற்ற தாதிகள், உணவு வங்கிகளும் ஏனைய இன்றியமையாத உதவிகளும் இடம்பெறுவதை உறுதி செய்யும் தொண்டர்கள், விவசாயிகள், கனேடியர்கள் அவர்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை உறுதி செய்யும் விநியோக வலையமைப்புக்களில் பணிபுரிவோர் உட்படச் சக கனேடியர்களுக்கு உதவியாகச் செயற்படும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொண்டர்களை உதவிக்கு அழைத்துள்ள Health Canada சிறப்புத் திறமைகளைக் கொண்ட தொண்டர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருகிறது. தொடர்புடையோரைத் தேடிக் கண்டறிதல், மாற்றங்களைக் கண்காணித்தல் (contact tracing and case tracking), தரவுகளைத் திரட்டி அறிக்கையிடல் (case data collection and reporting), மருத்துவத்துறை வளங்களைத் திடீரெனப் பெருமளவால் அதிகரித்தல் போன்றவற்றில் உதவக்கூடிய தொண்டர்கள் Canada.ca/Coronavirus இல் விபரங்களைப் பதிவு செய்யலாம். தேசிய கோவிட்-19 தொண்டர்களுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 ஆந் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

கனேடிய அரசு, கனேடிய பாதுகாப்புப் படையின் றிசேர்வ் பிரிவினரைத் தொடர்பு கொண்டு, அவர்களை முழு நேர சம்பளம், சலுகைகள் என்பவற்றுடன் முழு நேரமாகப் படையில் இணைத்துக்கொள்வதற்கு முற்பட்டுள்ளது. கனேடியப் பாதுகாப்புப் படையினர் நாடு முழுவதிலும் அவசர நிலைகளில் உதவி புரிவதற்கான பயிற்சியையும், வல்லமையையும் கொண்டிருப்பதால் தேவை ஏற்பட்டால் உதவிக்கு அழைக்கக் கூடிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகப் படைகளில் உள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சி செய்கின்றது.

கோவிட்-19 காரணமாக மரணமான 233 கனேடியர்களின் குடும்பங்களுக்கும் பிரதம மந்திரி ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு கனேடியரிடமும் உள்ள பொறுப்பு, வல்லமை என்பவற்றை அவர் வலியுறுத்தினார். கோவிட்-19 பரவும் ஆபத்தைக் குறைப்பதற்காக, சமூக இடைவெளி பேணுதல், கைகளைக் கழுவுதல், பொது இடங்களுக்குச் செல்வதை மிகவும் குறைத்துக் கொள்ளுதல் என்பன தொடர்பான கனடா பொதுச் சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதைத் தொடருமாறு அனைத்துக் கனேடியர்களிடமும் அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.