சுவிட்சர்லாந்தை தொடர்ந்து பிரான்சிலும் வந்தது முக்கிய தடை!

பிரான்சில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள், முக்கிய கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றன.

குறிப்பாக சுவிட்சர்லாந்து பொதுஇடங்களில் சுமார் 1000 பேர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை தாற்காலிக தடை எனவும், இது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்றும் அரசு தெரிவித்தது.

சுவிட்சர்லாந்து அறிவித்த சில நாட்களில், இப்போது பிரான்ஸ் அரசும் முக்கிய முடிவு எடுத்துள்ளது. சுமார் 5000 பேர் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து பிரான்சின் சுகாதார துறை அமைச்சர் Oliver Veran கூறுகையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பிரான்ஸ் முழுவதிலும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தற்காலிகமானவை, அவற்றை நாங்கள் திருத்த வேண்டியிருக்கும். இது நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் பரவல் தான் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்சில் தற்போது வரை 100-க்கும் மேற்படோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் 12 பேருக்கு சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் குறிப்பாக Oise மற்றும் வடக்கு பாரிசில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மட்டும் சுமார் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக வரும் ஞாயிற்றுக் கிழமை பாரிசில் 40,000 பேர் கலந்து கொள்ளவிருந்த மாரத்தான் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்