வடக்கில் இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருக்க கோட்டாபய அரசாங்கம் முயற்சி- மாவை

வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்சிகளை கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கிராஞ்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில்தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தன. இந்தக் காலத்தில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வடக்கிற்கு அதிகளவான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில்தான். இருப்பினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதியையே இந்த அரசாங்கம் விடுவிக்காது செயற்பட்டு வருகின்றது.

அது மட்டுமன்றி கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டுவந்த வேலைத் திட்டங்களையும் இடைநிறுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பின்னரான சூழலில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற சூழலில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளில் இருந்து விலகுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி அந்த நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரைப் பயன்படுத்தியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்சியாகவே இதன் வெளிப்பாடு உள்ளது. இத்தகைய விடயங்களை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இங்குள்ள சிலரும் இணைந்து செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வாறு ஆதரவை வழங்கினார்களோ அத்தகைய ஆதரவை தொடர்ந்தும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்.