பயணியின் முறைப்பாட்டையடுத்து சாவகச்சேரிக்கும், கைதடிக்குமிடையில் நடுவழியில் வழிமறிக்கப்பட்ட இ.போ.ச பேருந்து: யாழ் சாலை முகாமையாளர் அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணம் செய்த பேருந்தென்றில் நடத்துனர் சிட்டை வழங்காமல் பணம் பெறுகிறார் என பயணிகள் அறிவித்ததை தொடர்ந்து, நடுவழியில் பேருந்து மடக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

இன்று (28) காலையில் இந்த சம்பவம் நடந்தது.

முல்லைத்தீவு சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலையில் யாழ்ப்பாணத்தை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்துள்ளது. இதன்போது குறுந்தூர பயணிகளிடம் பணத்தை பெற்ற நடத்துனர், அவர்களிற்கு சிட்டை வழங்கவில்லையென, பேருந்திற்குள் இருந்த சிலர் அவதானித்ததாக குறிப்பிட்டு, யாழ்ப்பாண சாலை முகாமையாளருக்கு இது குறித்து தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முகாமையாளர் மற்றும் சிட்டை பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து செயற்பட்டு, சாவகச்சேரிக்கும், கைதடிக்குமிடையில் பேருந்தை வழிமறித்தனர்.

நடத்துனரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தொலைபேசி வழியாக முறையிட்டவர்களிடம் வாக்குமூலத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.