28 இலட்சத்தை அமுக்கிய கில்லாடி

பெண் ஒருவரின் வங்கி அட்டையை வஞ்சகமான முறையில் பெற்று 28 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

புத்தள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு சொந்தமான கட்டடமொன்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாவை வங்கியில் வைப்பிலிட சந்தேக நபரின் உதவியை பெற்றுக் கொண்டுள்ளார். இதன்பின்னர் வங்கி அட்டையை சந்தேக நபர் வஞ்சகமான முறையில் பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் சந்தேக நபர் பல தடவைகள் குறித்த பெண்ணின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளார். இதுவரை அவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தொகை 28 இலட்சம் ரூபாவாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் பணம் மீளப்பெறுவதற்காக வங்கிக்கு சென்றிருந்த போதே இது தொடர் பில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறாத நிலையில் குறித்த பெண்ணும் சுகவீனமடைந்துள்ளதால் தொலைபேசி ஊடாக சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மோசடி செய்த பணத்தில் பஸ் ஒன்றை புதிதாக கொள்வனவு செய்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.