ஐ.நாவில் பகிரங்க அறிவிப்பு விடுத்தார் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நாவில் பகிரங்க அறிவிப்பு விடுத்தார் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் இன்று ஆற்றிய உரையின் போது அறிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளை மீறியுள்ளதோடு, குறிப்பாக, 30/1 தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்படவில்லை என்பதோடு, நாடாளுமன்றத்திலும் அது சமர்ப்பிக்கப்படவில்லை, அது மாத்திரமன்றி அப்போதைய ஜனாதிபதியின் ஒப்புதலும் இதற்கு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாதது என்பதோடு, மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடாக அது அமையும் எனவும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கொள்கையை கருத்திற்கொண்டு கடந்த காலத்தின் சில பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு விசாரணை ஆணைக்குழு சில விடயங்களை முன்மொழியுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் மூலம் நிலையான அமைதியை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்த அவர் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யதார்த்தமற்றதும் அரசியலமைப்பை மீறியதும், நிறைவேற்ற முடியாததுமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

Allgemein