சிரியா மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல்!

சிரியா தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து அதிகாலை 20 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது, அதில் 10 ராக்கெட்டுகளை வான்பாதுகாப்பு அமைப்பு தடுத்து முறியடித்தது.

இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரியா மற்றும் காசாவில் உள்ள இஸ்லாமிக் ஜிகாதி தீவிரவாதிகளை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு படை கூறியுள்ளது.

மேலும், சிரியா மற்றும் காசா பகுதியில் தாக்கப்பட்ட தளங்கள் ஆயுதங்களின் ஆராய்ச்சி-மேம்பாட்டிற்கு மற்றும் உற்பத்தி செய்யப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

இந்த தளங்கள் ஒவ்வொரு மாதமும் ராக்கெட் எரிபொருளை உற்பத்தி செய்கின்றன எனவும் கூறியது.

டமாஸ்காஸ் சர்வதேச விமான நிலையத்தை குறித்து இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலை அதன் வான் பாதுகாப்பு எதிர்கொண்டு முறியடித்ததாக சிரியா கூறியது.

எனினும், வான்வெளி தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த இருதரப்பிலிருந்தும் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.