மறுக்கின்றார் தொண்டமான்:மோடி சாட்சியாம்?

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கலாச்சார மண்டபத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென தாம் கோரவில்லை என்றும் கலாசார நிலையத்தை பராமரிக்க உதவி செய்யுமாறே தாம் கோரியதாக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரதமர் மகிந்த ராஐபக்சவோடு அண்மையில் இந்தியாவிற்கு விஐயம் செய்திருந்தோம். அதன் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தோம். அந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் என்ன கட்டத்தில் இருப்பதாக பிரதமர் மோடியே என்னிடம் கேட்டிருந்தார்.
கலாச்சார நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவே கூறியிருந்தேன். அத்தோடு அந்த நிலையத்தை பராமரிப்பதில் சிக்கல்கள் இருப்பதையும் தெரிவித்திருந்தேன். அதாவது அந்த மத்திய நிலையத்தை பராமரிப்பதற்கு மாதாந்தம் 30 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் அதற்கான நிதி மாநகர சபையிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
ஆகவே பராமரிப்பதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று தான் கேட்டிருந்தேனே தவிர கலாசார நிலையத்தை மத்திய அரசிடம் தருமாறு கேட்கவில்லை. அவ்வாறு நான் கேட்டதாக வருகின்ற செய்திகளில் உண்மையில்லை.
நான் பாரதப் பிரதமருடன் என்ன பேசினேன் என்பது அந்த மேசையில் இருந்தவர்களுக்கே தெரியும். ஆகையினால் அதற்கு மாறாக சொல்கிறவர்கள் யாராகினும் பாரதப் பிரதமரிடம் சென்று கேட்டு வரச் சொல்லுங்கள் என்றார்.
தாயகச்செய்திகள்