அகப்பட்டது அம்புதான்! எய்தவனுக்கு எப்போது? பனங்காட்டான்

மகிந்த, மைத்திரி, ரணில் ஆட்சிக்காலங்களில் சவேந்திர சில்வாவை விட்டு வைத்த அமெரிக்கா இப்போது எதற்காக அவருக்குப் பயணத்தடை
விதித்துள்ளது? கோதபாயவின் இரட்டைப் பிரஜாவுரிமையை கிடுகிடு வேகத்தில் ரத்துச் செய்த அமெரிக்கா அவரை இலங்கையின் புதிய ஜனாதிபதியாக்க திடீரென அக்கறை காட்டி நினைத்ததை முடித்தது எதற்காக? இதில் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கு என்ன? விடை காண வேண்டிய கேள்விகள் பல உள்ளன. 

முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 129 மாதங்கள் முடிந்துவிட்டது.

இக்காலகட்டத்தில் காணாமல் போனவர்களை இறந்துவிட்டார்களென்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்கப்படுமென்றும் சிங்கள அரசின் தலைவர் கோதபாய எந்த மனக்கிலேசமும் இல்லாது கூறிவிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்த போராட்டம் ஒவ்வொரு நாளாகக் கடந்து இந்த வாரம் 36 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளது. கிளிநொச்சியில் தொடரும் இந்தப் போராட்டம் இந்த வாரத்தில் 1096வது நாளில் புகுந்துள்ளது.

ஆண்டுக் கணக்கில் கொண்டாட்டம் நடத்தும் காலமும் நேரமும் இதுவல்ல. போராடிக் கொண்டிருக்கும் உறவுகள் அடுத்தடுத்து மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர்.

போராட்டம் நடத்துபவர்கள் மரணித்து முடியும்வரை இவர்கள் போராட்டம் தொடரலாமென எண்ணத் தோன்றுகிறது. இதற்கொரு முடிவை சிங்கள பௌத்த ஆட்சிபீடம் தெரிவிக்கப் போவதில்லை. வேண்டுமானால் போராடி மரணிப்பவர்களுக்கும் நிதி நிவாரணம் (ந~;டஈடு) வழங்க இந்த ஆட்சிபீடம் முன்வரக்கூடும்.

இந்த விடயத்தை இங்கு ஆரம்பத்திலேயே கூறுவதற்கு முக்கிய காரணம், காணாமல் ஆக்கப்பட்டோர்கள் விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவர் இப்போது ஜெனிவா சமர்ப்பணங்களை முன்னிறுத்தி அமெரிக்காவின் கைகளுக்குள் சிக்கியிருப்பதுதான்.

அமெரிக்காவுக்குள் இவரோ இவரது குடும்பத்தினரோ போவதற்கு அமெரிக்கா தனது தடையை இந்த மாதம் 14ம் திகதி ராஜாங்கத் திணைக்களம் ஊடாக அறிவித்தது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற வேளையில் 58ம் படைப்பிரிவின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ள அமெரிக்கா, அவருக்கும் அவரது மனைவி மற்றும் இரண்டு புதல்விகளுக்கும் பயணத்தடை உத்தரவை பிரகடனம் செய்துள்ளது.

மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டத்துக்கு விரோதமான மனிதக் கொலைகளை புரிந்ததற்கு தங்களிடம் நம்பகரமான தகவல்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதுடன் நம்பகரமானவை எனவும் ராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் எவர் மீதும் தனித்துக் குற்றஞ்சாட்டி போராடாத நிலையில், அமெரிக்கா ஷஇவர்தான் அந்த ஆள்| என்று குத்திக்காட்டுவதுபோல சவேந்திர சில்வா குடும்பத்துக்கு பயணத்தடையை விதித்துள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னால் தமிழர் தரப்புகளால் மட்டுமன்றி பல வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் காலத்துக்குக் காலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் சவேந்திர சில்வாவின் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் அவர்கள் சம்பந்தப்பட்ட படுகொலைகள் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவண ஆதாரங்கள் நம்பகரமானவையென்று அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டியுள்ளது. இவர் மீதான பயணத்தடை காலம் கடந்த நடவடிக்கையாயினும், காலம் முடிவுறாத ஒரு நடவடிக்கை எனலாம்.

இலங்கையின் யுத்த கால செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறல், சர்வதேச நீதித்துறையுடனான விசாரணைப் பொறிமுறைகளுக்கான அமெரிக்கா பிரேரணை ஒன்றை ஜெனிவாவில் 2015ம் ஆணடில் முன்வைத்தது. 30ஃ1 இலக்கமுள்ள இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கியது. மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசின் காலத்தில் பல வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாயினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எதுவுமே அமுல்படுத்தப்படவில்லை.

மாறாக, அன்றைய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஜெனிவாவில் காலஅவகாசம் பெற்றுக் கொடுத்தது ஒரு வரலாற்றுச் சாபம். மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சியைக் கைப்பற்றிய கோதபாய இரண்டு விடயங்களுக்கு முன்னுரிமையை அறிவித்தார்.

மகிந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட 18ம் அரசியல் சட்டத்தை, மைத்திரி – ரணில் அரசு 19வது அரசியல் திருத்தம் வாயிலாக இல்லாமல் செய்தது.

அந்த 19வது திருத்தத்தை இல்லாமல் செய்து, மீண்டும் மகிந்த கால 18வது அரசியல் திருத்தத்தை அமுலாக்குவது கோதபாயவின் முதலாவது தெரிவு. அடுத்தது, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இணைஅனுசரணையிலிருந்து உடனடியாக விலகுவது.

ஜெனிவா இணைஅனுசரணையானது இலங்கையிலுள்ள தேசத்துரோகிகளால் கொண்டுவரப்பட்டது என்று மகிந்த ராஜபக்ச இந்த வாரம் தெரிவித்ததை, வெற்றுப் பேச்சாகப் பார்க்காது சீரியஸாக நோக்க வேண்டும்.

முன்னைய அரசில் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மங்கள் சமரவீரதான் 2015ல் ஜெனிவாவில் இணைஅனுசரiணையை அறிவித்து உரையாற்றியவர். மகிந்தவின் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இவர், இலங்கை ராணுவத்தை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றியதோடு மகிந்தவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் ஏறாது காப்பாற்றியதும் ஜெனிவாத் தீர்மானமே என்று கூறியுள்ளார்.

இப்போது இவர்களுக்குள்ளிருக்கும் போட்டி போர்க்குற்றம் புரிந்தவர்களா இல்லையா என்பதைவிட, மின்சாரக் கதிரையிலிருந்தும் குற்றவாளிக் கூண்டிலிருந்தும் காப்பாற்றியது யார் என்ற கேள்விதான்.

இதனூடாக ஒரு விடயம் வெட்டவெளிச்சமாகிறது. அதாவது, போர்க்குற்றம் புரிந்தது உண்மை. அதனால்தான் மின்சாரக் கதிரையிலிருந்தும்  குற்றவாளிக் கூண்டிலிருந்தும் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பது. இதனைப் பகிரங்கமாகக் கூறி, மறைக்க முனையும் போர்க்குற்றத்தை இவர்கள் இருவரும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோதபாயவின் இரட்டைப் பிரஜாவுரிமை சர்ச்சை எழுந்தது. அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமை உண்மையாகவே நீக்கப்பட்டதா என்ற கேள்வியும் பின்னால் எழுந்தது.

உண்மையாகவே அது நீக்கப்பட்டது என்று அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்தபோது சந்தேக அடிப்படையில் மற்றொரு கேள்வி எழுந்தது.

கோதபாயவை ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்துவதற்கு ஏதுவாக மிகத்துரிதமாக அவரது இரட்டைப் பிரஜாவுரிமையை அமெரிக்கா நீக்கியதாக அரசல்புரசலாக கதை பரவியது.

வழக்கமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, சஜித் பிரேமதாசவை ஆதரிக்காது, கோதபாயவை ஏன் ஜனாதிபதியாக்க விரும்புகிறது என்ற கேள்வியும் பல மட்டங்களிலும் எழுந்தது.

சஜித் புதிய ஜனாதிபதியாவதை ரணில் விரும்பாமையால், ரணிலுக்குச் சாதகமாக சஜித்தைத் தோற்கடிக்கும் நோக்குடன் அமெரிக்கா கோதபாயவுக்கு ஆதரவாக செயற்படுவதாக புதிய கணக்கொன்று காட்டப்பட்டது.

எதுவோ, கோதபாய ஜனாதிபதியாகிவிட்டார். அப்படியானால், அவரது பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கால போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு, அவரின் கீழ் இயங்கிய சவேந்திர சில்வாவை அமெரிக்கா ஏன் தண்டிக்கிறது?

இங்கு இன்னொரு கணக்கு உண்டு. மகிந்த ஆட்சியின்போது சவேந்திர சில்வாவைத் தண்டித்திருந்தால் அப்போது அமெரிக்க பிரஜாவுரிமையுடன் இருந்த கோதபாயவை அதற்குள் சிக்கவைக்க முடியாது.

ரணில் ஆட்சியின்போது சவேந்திர சில்வாவை தண்டிக்க முனைந்திருந்தால், அது ஐக்கிய தேசிய கட்சியை சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பலவீனமாக்கியிருக்கும்.

எனவே, கோதபாயவின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கி, அவரை புதிய ஜனாதிபதியாக்கி, அவரது ராணுவ பதவிக்காலத்தில் அவரோடு கஜபாகு அணியிலிருந்தவரும், யுத்த காலத்தில் 58ம் படைப்பிரிவின் தளபதியாக இருந்தவரும், கடந்தாண்டு மைத்திரியால் ராணுவ தளபதியாக்கப்பட்டவரும், தற்போது புதிய ஜனாதிபதியால் படைத்துறைப் பிரதானியாக்கப்பட்டவருமான சவேந்திர சில்வாவுக்கு பயணத்தடை கொண்டு வந்ததன் பின்னணி ஆழமாக ஆராயப்பட வேண்டியது.

2009 முள்ளிவாய்க்காலின் பின்னர் சவேந்திர சில்வா பெற்ற பதவிகளும் பதக்கங்களும் நோக்கப்பட வேண்டியவை. வீர விக்கிரம விபூசணவிலிருந்து அடுக்கடுக்காக பல பட்டங்கள். இறுதியாக வழங்கப்பட்ட ரணசுர பட்டம் பெற்ற முதலாவது ராணுவத் தளபதி இவரே.

அத்துடன் மேஜர் ஜெனரலாக பதவியுயர்வு வழங்கப்பட்ட இளவயதான முதலாவது ராணுவ அதிகாரியும் இவரே. இதன் பின்னர் 53ம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவுமாக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மேலதிக நிரந்தர பிரதிநிதி பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது ராஜரீக தூதுவர் பதவிக்கு நிகரானது. போர்க்குற்றவாளிக்கு இந்நியமனம் வழங்கப்படக்கூடாதென சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக் கிளம்பியபோதிலும், மகிந்த அரசு தனது முடிவை மாற்றவில்லை.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இவ்வளவு பிரபல்யமான பட்டங்களும் பதவிகளும் இவருக்கு வழங்கப்பட்டதற்கு போதிய காரணமுண்டு.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் ஈழப்போர் ஆரம்பமானபோது இவரது தலைமையிலான ராணுவ அணியே மன்னார், விடத்தல் தீவு, நாச்சிகுடா, முழங்காவில், பூநகரி, கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, தர்மபுரம், விசுவமடு, சுகந்திபுரம், தேவிபுரம், புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், வெள்ளமுள்ள வாய்க்கால், கரையமுள்ளி வாய்க்கால் வழியாக நந்திக்கடல்வரை போர் புரிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததுடன் காணாமல் போகவும் செய்தது வெறும் பேச்சல்ல – இது பதிவில் உள்ளது.

அப்படியானால் ஒரு கேள்வி பழமொழி வாயிலாக எழுகிறது. ஷஎய்தவன் இருக்க அம்பை ஏன் நோக வேண்டும்| என்பதே அக்கேள்வி.

சவேந்திர சில்வா படைத்தளபதியாகவிருந்து யுத்தம் புரிந்து மனிதப் படுகொலைகளையும், மனித உரிமைகளையும் மீற உத்தரவுகளை வழங்கி வழிநடத்தியவர் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான இப்போதைய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச.

அமெரிக்க ஏற்படுத்தியுள்ள பயணத்தடை என்ற தண்டனை அம்புக்கானது. எய்தவனுக்கான தண்டனை எப்போது?