ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவு..!!

ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தீர்க்கமான முடிவு..!!

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்து விலகுவது என அரசு முடிவெடுத்துள்ளது.

அரசின் இந்த நிலைப்பாடு நாடாளுமன்றத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருக்கின்ற ஏனைய உறுப்பு நாடுகள் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுலாக்க வேண்டும். இது இலங்கை அரசின் முக்கிய கடமை.

தீர்மானங்களின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இரண்டு தடவைகள் கால அவகாசம் பெற்றும்கூட அந்தக் கருமத்தைச் செய்யாமல் தற்போது அதிலிருந்து விலகுவது என இலங்கை அரசு கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.

பழைய அரசுதான் ஐ.நா. தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கியது என்ற காரணத்தின் நிமித்தம் புதிய அரசு இந்தக் கருமத்திலிருந்து விலக முடியாது.

இலங்கை அரசின் தான்தோன்றித்தனமான முடிவால் சர்வதேச சமுகம் – விசேடமாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பணிகளையும், கடமைகளையும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அது மிகவும் குழப்பமான நிலைமை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

ஆனபடியால் ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து விலகுகின்றோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளமைக்கு நாம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை அரசின் இந்த முடிவை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.

இந்த விவகாரத்தை இனிமேல் எந்தவிதமாகக் கையாள்வது என்பது தொடர்பில் நாங்கள் ஒரு முடிவெடுப்போம். விரைவில் எங்களுடைய நிலைப்பாட்டை அறிவிப்போம்.

நாங்கள் மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருக்கின்ற ஏனைய உறுப்பு நாடுகள் இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்க்கமான ஒரு முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.

தாயகச்செய்திகள்