நல்லூர் விதானைமாருக்கு நாமம் போட்ட கில்லாடிகள்

நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவர்களை கைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் 39 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி செய்துள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்றைய தினம் (21) கைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட நபர்கள் தாம் ஜனாதிபதி செயலக அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு „உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தை ‚ஈசி காஸ்‘ மூலம் அனுப்பி வையுங்கள்“ என  கோரியுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாயும் மற்றையவர் 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை ‚ஈசி காஸ்‘ மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்து கொண்டு தாம் ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.