August 13, 2022

சிறுபான்மை மக்கள் மீது கைவைக்கும் உரிமை எவருக்கும் இல்லை! சம்பிக்க

ஸ்ரீலங்காவில் வாழும் எந்தவொரு நபருக்கும் சிறும்பான்மையின மக்கள் மீதோ அவர்களின் உடமைகள் மீதோ தாக்குதல் நடாத்த உரிமை இல்லையென சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்காவின் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இன வன்முறையொன்று கடந்த இரண்டு தினங்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டிய தேவையில்லையெனவும் தலை தூக்கியுள்ள முஸ்லிம் தீவிரவாதத்தை பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நாட்டை மீட்டு அதனை கட்டமைக்கும் மக்கள் இயக்கம் என்ற தொனிப்பொருளின் கீழ் பெரும் மாநாடொன்று நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பெளத்த மதகுருமார்கள் சிலர் உட்பட அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.

சில காடையர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நேற்று முன்னதினம் மற்றும் நேற்றைய தினம் இரவு வேளைகளில் மேற்கொண்ட பாதிப்பினை நாம் அவதானித்தோம். எந்தவொரு வழியிலும் நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. தனக்கு தேவையாயின் இந்த திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் தேவையான எந்தவொரு வியாபார நிலையத்திலும் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். தான் விரும்பாத இடத்துக்கு செல்லாமல் இருக்க முடியும். எனினும் யாருக்கும் காடையர்களைப் போல ஏனையோரின் வர்த்தக நிலையங்களுக்கோ வீடுகளுக்கோ அல்லது வணக்கஸ்தலங்கள் மீதோ தாக்குதல் நடாத்த உரிமையில்லை. இவ்வாறான சம்பவங்கள் கடுமையாக சட்டம் செயற்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

இந்த பிரச்சினையில் நாம் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்த தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட நபர்கள் சிறியளவானவர்களாவர். அவர்கள் இந்த 20 லட்சமாக கருதப்படும் முஸ்லிம் மக்கள் இல்லை. எனினும் இந்த தீவிரவாதத்துடன் தொடர்புபட்டுள்ள குழு 100இல் அடங்கும் சிறிதளவானவர்களேயாவர். ஆனால் இந்த 100பேரளவு கொண்ட குழு மிகவும் பலம் கொண்ட வித்தியாசமான மனதுடன் செயற்படுபவர்களாக உள்ளனர். ஜே.வி.பிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வீரர்கள் இணைந்துக் கொண்டது வறுமையினாலாகும். எனினும் தற்போது உருவாகியுள்ள இந்த தீவிரவாதம் அதிசொகுசு கார்களில் சென்று தாக்குதல்களை நடாத்தும் தீவிரவாதம் என நாம் மறந்துவிடக் கூடாது.

அதேபோல இது வேறொரு வடிவத்தில் இந்த முழு உலகிலும் வியாபித்துள்ள விடயமென்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அப்படியாயின் அந்த சிறிய குழுவினை முறையாக தேடிப் பார்த்து பாதுகாப்பு தரப்பினரால் அழிக்க நாம் எமது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்.

நாம் சுதந்திரமடைந்து தற்போது 7 தசாப்தங்கள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த 7 தசாப்தங்களில் முதல் பாதியினை நாம் வலது – இடது என அரசியல் குழப்பத்தின் மீதே கடந்து வந்தோம். இதன் உச்சகட்டமாக மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை கைகளிலெடுக்கும் அளவுக்கு சென்றது. சமூகத்தை மாற்றியமைக்க சிறந்த நாடாக நமது நாட்டை மாற்றியமைக்க ஆயுதங்களை கையிலெடுத்துக் கொண்டு போராட ஆரம்பித்தனர்.

எனினும் 1983 ஜூலை மாதம் இடம்பெற்ற கலவரத்தினைத் தொடர்ந்து இந்த நாட்டு அரசாங்கத்தில் வலது இடது என இருந்த அரசியலுக்குப் பதிலாக வடக்கில் பிரிவினை வாதம் தொடர்பான பிரச்சினை, தமிழ் பிரிவினைவாதத்துக்கு வழங்கும் பின்னூட்டல்கள் வழியாக நாட்டின் அரசியல் உடைந்தது. அதனால் புதிய பிரிவொன்று 83இலிருந்து நாம் அவதானித்தோம். இந்த நாட்டின் அனைத்து பிரச்சினைகள் மற்றும் தேர்தல்களின் போது அனைத்து அரசியல் சமூக செயற்பாட்டிலும் அதுவே முதன்மையானது. இலட்சக்கணக்கிலான மக்கள் உயிரிழந்தனர். வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றன. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த நாட்டை விட்டு சென்று வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போது இந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நாம் புதிய பிரிவினையொன்றுக்கு பயணிக்கின்றோமா அதாவது இஸ்லாமீய தீவிரவாத செயற்பாடு மற்றும் அவற்றுக்கு பதிலளிப்போராக நாம் மாறி எதிர்வரும் தசாப்தத்தை நாம் இந்த நாட்டில் அவ்வாறு கழித்துவிடுவோமோ என்ற பிரச்சினையே எம் முன்னால் உள்ளது.

எனினும் நாம் இவ்வாறு முயற்சிப்பது இந்த பிரச்சினையினை குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் நிறைவு செய்து கொள்ளவாகும். அன்று 1978ஆம் ஆண்டு பஸ்தியன் பிள்ளை எனும் பொலிஸ் பரிசோதகரை கொலை செய்த சந்தர்ப்பத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜயவர்தன அப்போதைய இராணுவத் தளபதி வீரதுங்கவினை அனுப்பி குறிப்பிட்டட சில மாதங்களுக்குள் இந்த பிரச்சினையினை முடிவுக்கு கொண்டு வருமாறு தெரிவித்தார். அவரும் 6 மாதங்களில் பிரச்சினையினை நிறைவுக்கு கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனினும் 6 மாதம் 6 வருடங்களாகி அந்த 6 வருடங்களும் 30 வருடங்களாகியே நிறைவு பெற்றது. அதேபோல இந்த பிரச்சினையும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நாம் நிறைவு செய்துக் கொள்வோமா அல்லது எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு இது இழுத்துச் செல்லப்படுமா? அல்லது எதிர்வரும் 3 தசாப்பதங்களுக்கு எமது வாரிசுகளுடனும் இணைந்து இந்த போராட்டைத்தை கொண்டு செல்வோமா என்பது தீர்மானிக்கப்படுவது நாம் இன்று இந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் விதத்திலாகும் என்றார்.