August 18, 2022

வடக்கு தமிழ் பிரதிநிதிகளின் மனமாற்றம் -ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிழ்ச்சி!

வடக்குக்கு இராணுவம் அவசியமில்லை என்றும் அங்கிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என வலியுறுத்திவந்த தமிழ்ப் பிரதிநிதிகள் தற்போது வடக்கின் பாதுகாப்புக்கு இராணுவம் அவசியம் என்று கூறுவதாகவும், இந்த மன மாற்றம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு அமைச்சராக இருக்கும் ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் அனைவரையும் இன்னும் மூன்றே நாட்களில் கைது செய்வதாக ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகிய காலத்தில் தமிழ் மக்களை சந்தேக கண்ணோட்டத்தோடு சிங்கள சமுதாயம் பார்த்ததனால் தமிழர்கள் பலர் அந்த இயக்கத்துக்குள் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சிறிலங்கா ஜனாதிபதி, அதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தீவிரவாதிகளைப் போல் பிழையான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனோபாங்கை சிங்கள மக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த தீவிரவாத பிரச்சனையானது ஸ்ரீலங்காவில் ஆரம்பமானதல்ல. இது சர்வதேச ரீதியிலான பிரச்சினை. இலங்கை தாக்குதலுக்கான பொறுப்பை எங்கேயோ இருந்த தீவிரவாத தலைவர் ஒழிந்துகொண்டு பொறுப்பு கூறியிருந்தார். மிகவும் பலம்வாய்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்,ரஷ்யாவின் புடின், உள்ளிட்டவர்கள் இந்த தீவிரவாதத் தலைவர் இறந்துவிட்டதாகவே நம்பியிருந்தார்கள். 08 நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு உயரதிகாரிகள் எமக்கு உதவுகிறார்கள். 04 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்று நம்பியிருந்த ஐ.எஸ் தீவிரவாத தலைவர் எப்படி மீண்டும் தோன்றினார் என்பது அவர்களுக்கு இப்போது மிகப்பெரிய தலையிடியாக உள்ளது என உணர்கிறேன். இந்த இரண்டு எழுத்து தீவிரவாத அமைப்பை நான் பெயர்கூறி அழைப்பதில்லை. எந்த நாட்டுத் தலைவர்களும் கூட இதனை பெயர்கூறி அழைக்கமாட்டார்கள். அவ்வாறு அழைத்தால் தீவிரவாதிகள் தங்களை ஏற்றுக்கொண்டதாக அறிந்துகொள்வார்கள். வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகளுடன் பேசியதில் நான் உணர்ந்த விடயம் என்னவென்றால் இந்த தீவிரவாத அமைப்பு மேற்குலக சிந்தனைக்கு எதிராக எழுந்த அமைப்பாகும்.

வெள்ளையர்கள் மற்றும் அமெரிக்கர்களையே அந்த தீவிரவாதிகள் இலக்குவைக்கின்றனர். அதற்கடுத்து கிறிஸ்தவர்கள். வத்திகானில் தங்களுடைய கொடியை பறக்கவிட்ட தினமே வெற்றிதினம் என்று அந்த தீவிரவாதிகள் கூறியிருக்கின்றனர். பிரான்சில் பழைமைவாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் இடம்பெற்று ஒருமாதம்கூட நிறைவாகவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்பதையே நான் படையினருக்கு கூறியுள்ளேன். அவர்களுடன் தொடர்புபட்டவர்களையும் அழிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் மக்களுடைய பிரச்சினைகளை சிங்கள மக்களுடைய பிரச்சினைகளைப் போன்று புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் மக்கள் மீது சிங்களவர்கள் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். தமிழ் மக்கள் மீதும் இந்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. வடக்கிலும் பாடசாலை மாணவர்கள் கற்றலுக்கு செல்வதில் வீழ்ச்சி உள்ளது.

‘ஏப்ரல் 21ஆம் திகதி முதல் இன்றுவரை 56 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12 பேர் மிகமுக்கியமான தீவிரவாதிகள். இதுவரை தீவிரவாதிகள் பயன்படுத்த இருந்த 103 டெட்டனேட்டர்கள், 200 ஜெலிக்னைட் குச்சிகள், 50 குண்டுகள் தயாரிக்கும் வெடிபொருட்கள், 13 பாதுகாப்பு சேமிப்பகங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருந்த 41 வங்கிக் கணக்குகள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்புடன் தொடர்புடைய சொத்துக்கள் அரசுடமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுக்கு உதவியவர்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வு விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாதாரண சிறிய உதவியை செய்தவர்களுக்கும் 20 இலட்சம் ரூபா தீவிரவாதிகளால் வழங்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகளுடையது என்று சந்தேகிக்கப்படும் 18 மில்லியன் ரூபா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 15 வாகனங்களும், 04 மோட்டார் சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“சில ஊடகங்களின் செயற்பாடுகளில் திருப்தியடைய முடியவில்லை. புலனாய்வு தகவல்களுக்கு அமைய 150 பேரே தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களின் பின்னர் அனைத்து தமிழர்களும் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்ற சந்தேகம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டதால் நல்லிணக்கம், ஐக்கியம் சிதைந்தது. கறுப்பு ஜுலை கலவரத்தினால் தெற்கில் தமிழர்கள் பலர் விடுதலைப் புலிகள் மீது ஈர்க்கப்பட்டனர். ஏன் 30 வருட யுத்தம் ஏற்பட்டது என்றால் இந்த சந்தேகமே காரணம். சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களிடமிருக்கும் சந்தேகத்தை நீக்குவதற்கு அனைவரும் இணைய வேண்டும் என தயவான அழைப்பு விடுக்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆரம்ப நாட்களைப் போல தமிழ் மக்களைப் பார்த்த கண்ணோட்டத்திலேயே தற்போது முஸ்லிம் மக்களையும் பார்க்க வேண்டாம். சில பொய்யான செய்திகளினால் முஸ்லிம் மக்கள் தீவிரவாதத்தில் ஈர்ப்பு கொண்டவர்களாக மாறிவிட இடமளிக்க முடியாது. புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு, பொலிஸ் தரப்பு என்பவற்றை மறுசீரமைப்பு செய்து வருகின்றேன். மக்கள் அச்சமடைய வேண்டாம். பாதுகாப்பு தரப்பினர் இன்று அல்லது இன்னும் மூன்று நாட்களில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துவிடுவார்கள். தீவிரவாத தாக்குதல் எப்போது இடம்பெறும் என்று அமெரிக்காவின் டிரம்ப் அல்லது இந்திய பிரதமர் மோடியினாலும் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாது. நாடாளுமன்றத்திலும் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த தீவிரவாத கும்பலின் தலைவர் நானே என்று. இது தவறாகும். அரசியலில் ஆரோக்கியமான விமர்சனங்கள் நல்லது. ஆனால் சிலர் தவறான விமர்சனத்தை முன்வைக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.