August 17, 2022

அவசரகாலச் சட்டத்திற்கு கை தூக்கியவர்களே மாணவர் கைதுக்கு பொறுப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் கைது உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றும் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் பல்கலைக்கழக மாணவர்களே முன்னின்று நடத்தியிருந்த நிலையில் 10 ஆவது ஆண்டு நினைவேந்தலைக் குழப்பும் விதமாகவே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பின்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது பங்கும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் ஆகியோர் யாழ் ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து அவரசகால பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குண்டு வெடிப்பு நடைபெற்ற இடங்களை விட வடக்கு மாகாணத்திலே இராணுவ கெடுபிடிகள் அதிகரித்து காணப்படுகின்றன. அமைதியாக உள்ள எமது பிரதேசத்தில் போர்க்காலத்தை போல பதற்றமான நிலைமையை இராணுவம் உருவாக்க முயற்சிக்கின்றது. அதன் ஓர் அங்கமே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது, பல்கலைக்கழக சிற்றுண்டி சாலை நடத்துனர் கைது சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பல்க்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நுழைந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அப்பாவி மாணவர்கள் இருவரை கைது செய்து பொய்க்குற்றச்சாட்டினை சுமத்தி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலீசார் தமது பங்கிற்கு அக்குற்றச்சாட்டுக்களுக்கு மேலும் மெருகூட்டி ஊதிப்பெருப்பித்து மாணவர்களை எப்படியாவது பயங்கரவாதிகளாக்கிவிட வேண்டுமென்பதில் குறியாக இருந்து  குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

மற்றும் யாழ் மருத்துவபீட தேநீர்ச்சாலை நடத்துனர் பொன்னம்பலம் ஞானவேல் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை பதிந்துள்ள பொலீசார் அவரை தொடர்ந்தும் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றை ஏவி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிலைவேந்தலை பல்கலைக்கழக மாணவர்கள் தலைமை தாங்கி நடத்துவதனை தடுக்க சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் சதியே இந்த கைது நடவடிக்கையாகும். அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது காணாமல் ஆக்கப்படடவர்களுக்காவும்,தமிழ் இன அழிப்புக்கு உரிமை கோரியும் பல போராட்டங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் இதுவரை காலமாக முன்னெடுத்து வருகின்றது.இந்த செயலுக்கு பழிதீர்க்கவும் அவற்றை முடக்கவும் திட்டமிடட வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவம்,பொலிஸார் ஆகியோரது சீருடைகளில் வித்தியாசங்கள் இருந்தாலும் அவர்களின் மனநிலை தமிழர்களை அதிலும் குறிப்பாக தமிழ் இளைஞர்களை  அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வஞ்ச மன நிலையிலேயே உள்ளனர்.

அரசுக்கு பாராளுமன்றத்தில் எல்லா வகையிலும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இதற்கு முழுப் பொறுப்பினையும் கூறவேண்டும்.ஏனெனில் பயங்கரவாத தடை சட்டத்தினை அமுல்படுத்த பாராளுமனத்தில் எவ்வித யோசனையும் இன்றி  ஆதரவு கொடுத்தனர். இப்போது மாணவர்கள் கைது செய்யப்பட்தும் விழுந்தடித்து பொலிஸ் நிலையத்துக்கு ஓடி வருகின்றனர்.தென்னிலங்கையில் ஒரு முகத்தையும் வடக்கில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு முகத்தையும் காட்டி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாடகமாடி வருகின்றார்.