August 14, 2022

சோதனைச் சாவடிகள் சிங்களவருக்கல்ல; தமிழர்களுக்கு மட்டுமே!

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலுக்காக நெடுஞ்சாலைகளில் பெருமளவு சிறிலங்கா படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், சிங்களப் பகுதிகளில் சோதனைகள் எதுவும் இடம்பெறுவதில்லை எனவும், தமிழ்ப் பகுதிகளிலேயே சோதனைக் கெடுபிடிகள் அதிகமாகவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிலிருந்து புறப்படும் பஸ்களைப் பொறுத்தவரையில் பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை. அனுரதபுரத்திலும் இல்லை. வவுனியாவைத் தாண்டிய பின்னரே சோதனைகள் ஆரம்பமாகின்றன என வடபகுதிக்கான பயணிகள் தெரிவிக்கின்றார்கள்.

மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் நேற்றிரவு புறப்பட்டு யாழ்ப்பாணம் சென்றடைந்த ஒருவர் இது குறித்து தனது முகநூலில் இவ்வாறு பதிந்திருக்கின்றார்.

“நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து யாழ்செல்லும் கடைசிப் பேருந்து இரவு 9.00 மணிக்குப் புறப்பட்டது. அதில் 15 பேர் அமர்ந்திருந்தனர். ஒரு பெண் ஏனையோர் ஆண்கள். மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து கனகராயன்குளம் வரும்வரை எந்த சோதனைக் கெடுபிடியுமில்லை.

புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையில் சோதனைச் சாவடி ஒன்றில் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் பேருந்து நிறுத்தப்பட்டது. இராணுவச் சிப்பாய் ஏறி அனைவரதும் அடையாள அட்டையை சோதித்தார். நித்திரையிலிருந்தவர்களை அதட்டி எழுப்பி அடையாள அட்டையை சோதித்தார்.

பின்னர் பேருந்து தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது. மாங்குளம் பொலிஸ் நீலையத்திற்கு முன்னாலுள்ள சோதனைச் சாவடியில் அதிகாலை 2.00 மணியளவில் பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. அனைத்துப் பயணிகளும் தமது அனைத்துப் பொதிகளுடனும் இறங்கி நடந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர். அனைவரரும் பொதிகளைகாவிக்கொண்டு சென்றனர்.

சோதனைக் கெடுபிடிகளின் பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறியதும் அது யாழ் நோக்கி ஏ – 9 வீதி வழியே பயணத்தைத் தொடர்ந்தது. ஆனையிறவில் உள்ள இராணுவ சோதனைக் கெடுபிடிச் சாவடியில் மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது. இராணுவச் சிப்பாய் பேருந்தில் ஏறி அனைவரதும் அடையாள அட்டைகளையும் சோதனையிட்டார். அதன் பின்னர் பேருந்து பயணத்தை ஆரம்பீத்தது. சுமார் 3.30 மணிக்கு யாழ் பேருந்து நிலையத்தை அடைந்தது அப் பேருந்து.

அப்பேருந்தின் பயணிகளில் நானும் ஒருவன்.”

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.