August 11, 2022

புலிகள் இருந்திருந்தால் எவனாவது வந்து குண்டு வைத்திருப்பானா?

கொழும்பு குண்டுவெடிப்புக்கு சிங்கள அரசுதான் காரணம்?

சிங்கள அரசு ஈழத் தமிழர்களின் மண்ணில் ஆடிய கோரத் தாண்டவத்தைப் போல பயங்கரவாதம் இப்போது சிங்கள மண்ணில் கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. அத்துடன் தமிழர் தாயகப் பகுதியான மட்டக்களப்பும் இதில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத தொடர் குண்டு வெடிப்பால் சிங்கள அரசே அல்லாடியுள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் காரணம் அறியாமல் கொன்றழிக்கப்பட்டுள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாழாத சோகத்தை சுமந்துள்ளனர். ஈழ மண்ணில் சிங்கள அரசு நிகழ்த்திய கோரத் தாண்டவங்களை இந் நிகழ்வு நினைவுபடுத்தியுள்ளது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் ஆகின்ற சூழலில் மனித அழிவு முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தியுள்ளது. ஈழத்தின் கோயிலக்மீது சிங்கள அரசு குண்டுகளை வீசியதை நினைவுபடுத்தியுள்ளது.

இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது. இலங்கையில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் முகமாக சர்வதேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்களின் ஒத்தாசையுடன் இவை நடத்தப்பட்டிருக்கலாம் என்று இலங்கை அரசு கூறுகின்றது. எனினும் இலங்கையில் உள்ள பலம் பொருந்திய அரசியல்வாதிகளின் உதவிகளின்றி இதனை செய்ய முடியாது என்றும் சொல்லப்படுகின்றது.

எவ்வாறாயினும் மனித உயிர்களின் மதிப்பு தெரியாத, கோரமானவர்களின் கையலாகாத செயற்பாடே இது என்பதை கூறலாம். இதுவரையில் ஒன்பது இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சுமார் 207 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா காவல்துறையும் இராணுவமும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்ட சிங்கள தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ராஜபக்சேவும் கண்டன் வெளியிட்டுள்ளார். கண்டனங்களை வெளியிட உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நீங்கள் எல்லாம் ஈழ மண்ணில் எதை செய்தீர்கள் என்பதையும் உங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஒரு வகையில் பார்த்தால், இப்படியான கொடூர தாக்குதல்களை நடாத்தி மனிதப் பேரவலத்தை உருவாக்க உலகில் வழிகாட்டியதே சிங்கள அரசுதான். மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் ஈழ மண்ணில் சிங்கள அரசு வேட்டையாடி இனப்படுகொலையை நிகழ்த்தியது. இன்றைய தாக்குதலை பயங்கரவாத கும்பல் நடத்தியமைக்கான பொறுப்பை சிங்கள அரசு ஏற்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால், ஈழ மண்ணை மாத்திரமல்ல, சிங்கள தேசத்தையும் பாதுகாத்திருப்பார்கள். எமது உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அழித்த சிங்கள அரசு, பயங்கரவாதத்தை இன்றுதான் சந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் என்ற ஈழத் தீவின் போராளிகளை அழித்தமையினால் இப்படி கொடுஞ்செயல்கள் நிகழ சிங்கள அரசே முழுக்காரணம்.

ஆசிரியர்,21.04.2019