யாழ்ப்பாணத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆசாமி!


யாழ். மாவட்ட செயலக வளாகத்திற்கு பல்வேறு ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகை தரும் அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.தெய்வேந்திரம் இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அக்கடிதத்தில்,
மாவட்டச் செயலகத்தில் பல்வேறு ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகைதரும் அப்பாவி பொதுமக்களுடன் உரையாடி, அவர்களுடைய ஆவணங்களை விரைவாக பெற்றுத் தருவதாக கூறி, அவர்களிடமிருந்து பெருமளவு பணத்தினை பெற்றுக் கொண்டு, தான் ஆவணத்தை பெற்று தருவதாகவும் அதுவரை காத்திருக்குமாறும் கூறி மாயமாக மறைந்து விடுவார்.
இந்நிலையில் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருந்து பின்னர் தாம் ஏமாந்தது தொடர்பாக செயலக அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக முறையிட்டு வந்தனர்.
செயலக அதிகாரிகள் சீ.சீ.டிவி கெமரா மூலம் குறித்த ஆசாமியை அடையாளம் கண்டு அவரை தேடிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி 03ஆம் மாதம் குறித்த நபர் சிற்றூண்டிச்சாலையில் பொதுமகன் ஒருவருடன் உரையாடுவதனை அதிகாரிகள் அவதானித்து அவரை அழைத்து தம்மிடமிருந்த சீ.சீ.டிவி கெமரா பதிவுகளை காண்பித்து விளக்கம் கோரினர்.
அவரும் தனது குற்றத்தினை ஒத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து குறித்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.