August 10, 2022

மைத்திரியின் கணக்கு சரி வருமா? கதிகலங்க வைக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தல்

மைத்திரியின் கணக்கு சரி வருமா? கதிகலங்க வைக்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தல்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மைத்திரிக்கு 3 இலட்சம் வாக்குகளாவது கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் சுதந்திரக்கட்சி களமிறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாகவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சிகளை, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு நடத்துகிறது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு பிரதானியும், ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகருமான ஷிரால் லக்திலக தலைமையிலான குழுவொன்று தற்போது வடக்கில் முகாமிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால களமிறங்குவதென முடிவு செய்துள்ளதையடுத்து, அவரது ஆலோசகர்கள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆளுனர் சுரேன் ராகவனுடன், வவுனியாவில்- காதர் மஸ்தான், யாழ், கிளிநொச்சியில்- அங்கஜன் இராமநாதனை முன்னிறுத்தி தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், இதன் பெறுபேறுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இந்தக்குழு ஆராய்ந்து வருகிறது. இதன்போது, யாழ் மற்றும் கிளிநொச்சியில் தன்னால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை அங்கயன் இராமநாதன் நேரில் அழைத்து சென்று இந்த குழுவினருக்கு காண்பித்தார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த கட்சிகளிற்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால், அவற்றை மைத்திரியின் பக்கத்திற்கு சுலபமாக திருப்பலாமென அங்கயன் இராமநாதன் இந்த குழுவிடம் கூறியதாக தகவல்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற எப்படியான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியின் ஆலோசகர், யாழில் பல “பொக்கற் மீற்றிங்“ நடத்தி, கருத்துக்களை அறிந்து வருகிறார்.