August 11, 2022

மனிதனின் ஆயுளை குறைக்கும் மற்றுமொரு அச்சுறுத்தலான அறிவிப்பு!-2017 இல் 49 இலட்சம் பேரை பலிவாங்கிய சோகம்!

உலகளவில் காற்று மாசுவால் 2017ஆம் ஆண்டு மட்டும் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக முக்கிய ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சுத்தமற்ற காற்று நம் ஆயுட்காலத்தை சராசரியாக ஓராண்டு எட்டு மாதங்கள் வரை குறைக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனம், செயற்கைக்கோள் கருவிகளை பயன்படுத்தி, சுமார் 10,000 கண்காணிப்பு கருவிகளை வைத்து காற்று மாசு குறித்த தரவுகளை சேகரித்தது.

 

இதனை, காற்று மாசுவால் ஏற்பட்ட தாக்கங்களின் ஆதாரங்களோடு ஒப்பிட்டு, 2017ஆம் ஆண்டில் சுத்தமற்ற காற்றால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை கணக்கிட்டது.

அந்த அறிக்கையின் வேறு சில முக்கிய கண்டுபிடிப்புகளை பார்க்கலாம்.

உலகளவில் அதிக கேடுகளை விளைவிக்கும் நோய்கள் குறித்து பட்டியலிடப்பட்டது.

இதில் காற்று மாசு ஐந்தாவது இடத்தில் உள்ளது. உணவுமுறை, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல் மற்றும் சர்க்கரை நோய் முதல் நான்கு இடங்களிலும், உடல் பருமன் ஆறாவது இடத்திலும் உள்ளது.

 

காற்று மாசுவால் நமக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ததில், சுத்தமற்ற காற்றால் இதய நோய், சுவாச கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது.

உலகளவில் காற்று மாசுவால் நம் வாழ்க்கையின் ஆயுட்காலம் 20 மாதங்கள் குறையலாம், ஆனால், தெற்காசியாவில் இது மிகவும் மோசமாக இருப்பது போல தெரிகிறது.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் பிறக்கும் குழந்தைகள், இந்த சுத்தமற்ற காற்றால், தங்கள் வாழ்க்கையில் 30 மாதங்களை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று மாசுவால் மட்டும் இங்கு ஆயுட்கால விகிதங்கள் குறைகிறது என்று கூறிவிட முடியாது. இது போன்ற நாடுகளில் இதனை கட்டுப்படுத்த போதிய சுகாதார அமைப்புகள் இல்லை என்பதும் உண்மையே.

சுத்தமற்ற காற்றை சுவாசிப்பது, டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும் மூன்றாவது பெரிய காரணியாக இருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. வீரர்கள் சிலருக்கு நீரிழிவு நோய் குறித்த எந்த அறிகுறிகளும் எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இருக்க, சுத்தமற்ற காற்றை சுவாசித்ததற்கும், அவர்களுக்கு ஏற்பட்ட நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ஆனால், இது எப்படி நிகழ்கிறது என்பது இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. எனினும், காற்று மாசுவால் நுரையீரலில் வீக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே. இது உடலின் மற்ற அமைப்புகளுக்கு பரவக்கூடும்.

இன்சுலின் உற்பத்தியில் ஈடுபடும் செல்கள் வீக்கமடைந்து, உடலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலினை பாதிக்கும் என்று ஒரு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது.

வீட்டில் ஏற்படும் காற்று மாசுபாட்டால் 2017ல் சுமார் 16 லட்சம் பேர் முன்கூட்டியே உயிரிழக்க காரணமாக இருந்திருக்கிறது.

 

சமைக்க அல்லது குளிர்காலங்களில் தங்களை வெப்பமாக வைத்திருக்க திட எரிபொருட்களை எரிப்பதால் இது பொதுவாக நிகழ்கிறது. இந்தியாவில் 84.6 கோடி மக்களும், சீனாவில் 45.2 கோடி மக்களும் இந்த காற்றை சுவாசித்துள்ளனர்.

 

ஆனால், திட எரிபொருட்களில் மக்கள் சமைப்பதை குறைக்க, இந்தியாவும் சீனாவும் பெரும் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

இதுவே ஆபிரிக்கா போன்ற நாடுகளில், 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் உணவை சமைக்க திட எரிபொருட்களையே இன்னும் பயன்படுத்துகின்றனர்.

சுத்தமற்ற காற்றால் குழந்தைகளை விட வயதானவர்களே உயிரிழக்கின்றனர்.

காற்று மாசுபட்டால் ஏற்படும் தாக்கங்களில் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறித்து பல்வேறு ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றன. ஆனால், இதனால் உயிரிழக்கும் பத்தில் ஒன்பது பேர் 50 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர்.

இது ஒப்பீட்டளவில் ஒரு புதிய நிகழ்வு. 1990ல் ஐந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் காற்று மாசுவால் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில் இருந்தார்கள்.

அப்போது இருந்த பெரிய பிரச்சனை வீட்டில் ஏற்படும் காற்று மாசுதான். ஆனால், இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

ஆனால், ஒரு நற்செய்தி

உலகளவில், காற்று மாசுவின் அபாயகரமான நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கை 1990ல் 96 சதவீதமாக இருந்தது. 2017ல் அது 92 சதவீதமாக குறைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் காற்று மாசுவின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவும் இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

அறிக்கைப்படி 2017ஆம் ஆண்டு சீனாவில் காற்று மாசுப்பாட்டால் 8,52,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

நன்றி பிபிசி