August 18, 2022

நாடளாவிய ரீதியில் 8000 பொலிஸார் குவிப்பு.. 25,000 பலூன்கள் இறக்குமதி

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 8000 போக்குவரத்து பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இன்றிலிருந்து புத்தாண்டு நிறைவடையும் வரை இவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ​ரோஹன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு காலப்பகுதிகளில் குறிப்பாக ஏப்ரல் 10ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான 10 நாட்களில் தான் அதிக வாகன விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்று தெரிவித்தார்.

அத்துடன் குடி போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய முன்னெடுக்கப்படும் சிறப்புத் திட்டங்கள் அதிகரிக்கப்படவுள்ளதால் குடி போதையை பரிசீலனைச் செய்ய பயன்படும் 25,000 பலூன்களை இன்றைய தினம் இறக்குமதி செய்ததாகவும், அவை நாளை நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.