August 13, 2022

பல நூற்றாடுகளுக்கு பிறகு இந்து மதத்தை பற்றி ஆராயும் ஐரோப்பியர்கள்…!!!

பல நூற்றாடுகளுக்கு பிறகு இந்து மதத்தை பற்றி ஆராயும் ஐரோப்பியர்கள்...!!!

உலகிலேயே இந்துக்கள் மட்டும் தான் எல்லா மதங்களும் ஒன்று என நம்புகின்றனர். ஆனால் இது எந்தவகையிலும் ஏற்புடைய கூற்று அல்ல. இதை இந்துக்களைத் தவிர வேறு எவரும் ஏற்றுக் கொள்வதுமில்லை. எல்லா மதங்களும் ஒன்று கிடையாது; ஒவ்வொன்றும் தனித்த கருத்துகளை உடையது என்பதே உண்மையாகும்.

எல்லோரும் ஒரே இறைவனை வழிபடுகிறார்கள் என்றாலும் எல்லா மதங்களும் ஒன்று என சொல்வது பிழையாகும். சில மதங்களில், மக்கள் இறைவனைக் காட்டிலும் அந்த மதம், மதநூல், மதபோதகர் போன்றவற்றின் மீது அதிகப் பற்றுதல் கொண்டு அதனால் தவறாக திசைத்திருப்ப படுகின்றனர்.

எல்லா மதநூல்களிலும் அடங்கியிருக்கும் கருத்துகள் ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதில்லை. இவ்வளவு ஏன்? ஒரே மதத்திலிருக்கும் வெவ்வேறு பிரிவினர் பயன்படுத்தும் மதநூல்களின் கருத்துகள் கூட ஒன்றோடு ஒன்று ஒத்திருப்பதில்லை. இதனால் தான் சில மதங்களில் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் மிதமானவர்கள் என வெவ்வேறுபட்டவர்கள் உள்ளனர். காரணம் அவர்கள் ஒரே மதத்தை சேர்ந்திருந்தாலும் அவர்கள் அம்மதத்தின் வெவ்வேறு பிரிவுகளையும் வெவ்வேறு பதிப்புகளிலான மதநூல்களையும் பின்பற்றுபவர்கள்.

சத்தியமே தர்மம்

‘சத்தியம்’ அல்லது ‘உண்மை’ எனும் ஒழுக்கநெறி இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து ஒழுக்கநெறிகளில் ஒன்றாகும். “எல்லா மதங்களும் ஒன்று” என உலக நடைமுறையில் இல்லாத பொய்யான ஒன்றை நம்புவது எந்தவகையிலும் சத்தியத்திற்கு உட்பட்ட ஒரு செயல் கிடையாது.

ஒவ்வொரு மதங்களும் வெவ்வேறு தனித்த கருத்துகளை கற்பிக்கின்றன என்பதே உண்மை. ஆனால் அக்கருத்துகள் காலம், சமூக சூழல், மக்களின் பக்குவநிலை ஆகியவற்றிற்கு ஏற்புடையவையாக உள்ளனவா என்பதே முக்கியம். இந்துக்கள் தங்களிடம் இருக்கும் குற்றங்களை திருத்திக் கொள்ள ஒருபோதும் தவறியதில்லை.

சமூக சூழல் மற்றும் அரசியல் காரணமாக ஜாதிகள் நம் மக்களிடையே நிலைபெற்றிருந்தாலும் அதை சீர்திருத்த பல மகான்கள் வந்தனர். இன்றும் நிறைய இந்துக்கள் இந்திய சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் ஜாதியத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட எங்களோடு சேர்ந்து பாடுபடுகின்றனர். இதுபோன்ற பக்குவம் வேறு மதங்களில் உள்ளதா என்றால் அது சந்தேகம் தான். சில மதங்களில் பயங்கரவாதம் பெருகி வருகின்றது.

ஜாதிபேதங்களை விட பல மடங்கு கொடியது பயங்கரவாதம் ஆகும். அது ஒரு குறிப்பிட்ட மதத்தில் தான் பரவலாக உருவாகின்றது. எனினும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக அதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கின்றனர்.

நம்பிக்கைகளின் பிரிவுகள்

பகவத் கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்பிக்கைகளின் பிரிவுகளைப் பற்றி மிக தெளிவாக விளக்குகின்றார். தூய்மையான நம்பிக்கை ஒருவனை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றது (சத்வம்). ஆசையாலும் அவசரத்தாலும் உண்டான நம்பிக்கை ஒருவனை பூமியில் மீண்டும் மீண்டும் பிறக்க செய்கின்றது (ரஜஸ்). மூடத்தனத்தாலும் அறியாமையாலும் உண்டான நம்பிக்கை ஒருவனைப் பாவ செயல்களில் ஈடுபட செய்து நரகலோகங்களில் தள்ளுகின்றது (தமஸ்).

மதம் பரப்பும் வியாபாரம்

சில மதங்கள் மதத்தைப் பரப்புவதை ஒரு வியாபாரமாகவும் வாடிக்கையாகவும் செய்து வருகின்றன. ஒரு மிகப்பெரிய தொழில்நிறுவனம் போல செயல்பட்டு வரும் அம்மதங்கள், ஏழை எளிய மக்களிடம் பிரச்சாரம் செய்து மதமாற்றுகின்றன. பசியாலும் நோயாலும் வாடும் மக்களிடம் மதத்தை திணித்து அவர்கள் தங்களின் பூர்வீகத்தை மறந்து போகும் அளவுக்கு செய்கின்றன. அவர்கள் ஒருசில நன்மைகள் செய்தாலும் அதை மதமாற்றம் என்ற நோக்கத்தோடு செய்வது எந்தவகையிலும் முறையான செயல் கிடையாது.

“எந்தவொரு பலனையும் கருதாமல் செய்யப்படும் நல்ல செயல்கள் தான் ஒருவனை இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்கின்றன” என்று பகவான் கூறுகிறார். அப்படி இருக்கையில், மதமாற்ற நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் “ஆசைகளால்” சூழப்பட்ட செயல்களாகும். ஆசைகளால் செய்யப்படும் செயல்கள் அழிவையே தருகின்றன.

இந்த ஆசைகள் அவர்களை மட்டுமல்ல மதமாற்றப்பட்ட மக்களையும் கவ்விக் கொள்கின்றன. அதே ‘ஆசைகளால்’ அந்த மக்களும் தங்களின் பூர்வீக மதத்தையே எதிர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். இது இத்துடன் முடிவதில்லை. மாறாக ஒரு தேசத்தையும் அந்த தேசத்தின் பூர்வீக மக்களையும் ஒட்டுமொத்தமாக மாற்றி தங்கள் வசமாக்கி கொள்வர். இன்று ‘ஐக்கிய அமெரிக்கா’ என்று அறியப்படும் நாட்டின் பூர்வீக மக்கள் எங்கே? எல்லாம் மதமாற்றப்பட்டு விட்டனர்.

ஆப்பிரிக்காவின் பாரம்பரிய மதங்கள் எங்கே? அவர்களின் நிஜமான அடையாளங்கள் எங்கே? எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அதற்கு காரணம் சில மதங்கள் ஆன்மீகத்தோடு தொடர்பின்றி அரசியல் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன. அவை மற்ற நாடுகளை அடிமைபடுத்தும் ஓர் எளிய சாதனமாக மதங்களை உபயோகிக்கின்றன.

சொர்க்க ஆசையும் நரக பயமும்

நம்முடைய கோயில்களில் எந்த பூஜாரிகளும் நமக்கு “இந்துமதம் தான் உண்மையானது!! ஈசன் மட்டும் தான் உண்மை! மற்ற தெய்வங்களெல்லாம் பொய்! இந்துமதத்தில் இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும். மற்ற மதங்களில் இருந்தால் நரகம் தான் கிடைக்கும்” என சொல்லித் தந்தது கிடையாது. ஏனென்றால் அதுபோன்ற ஒரு கூற்று நம் வேதங்களில் இல்லை. குறிப்பாக சொல்லப் போனால் மோக்‌ஷம் தான் ஆன்மாவின் இறுதிநிலையே தவிர சொர்க்கமும் நரகமும் தற்காலிகமானவை தான்.

சில மக்கள் சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு நிறைய தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு சொர்க்க ஆசையை ஊட்டியது யார்? கண்டிப்பாக அவர்கள் பின்பற்றும் மதங்கள் தான் என்பதில் ஐயமில்லை. இந்துதர்மம் ஒருவனுக்கு மோட்சத்துக்கான வழியை காட்டுகின்றதே தவிர சொர்க்க ஆசையைக் காட்டவில்லை. இது செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், இது செய்யாவிட்டால் நரகத்துக்குப் போகவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான போதனைகள் சனாதன தர்மத்தின் அடிப்படை போதனை கிடையாது.

சொர்க்க ஆசை மற்றும் நரக பயம், இவ்விரண்டும் தான் நிறைய மனிதர்களை தவறான செயல்களில் ஈடுபட செய்கின்றன. ஆசையாலும் பயத்தாலும் நல்ல செயல்கள் செய்தாலும் அது நாளடைவில் தீய செயல்களாக கூட மாறலாம். நிறைய மக்களை மதமாற்றினால் சொர்க்கத்தில் ‘சிறப்பு’ பிரமுகருக்கான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஒருசில மதங்களில் உள்ளன. இதனால் அவர்கள் மிகவும் ‘தீவிரமாக’ மதமாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதமாற்றம் ஓர் இனபடுகொலை

மதமாறுவது இனபடுகொலைக்கு சமமாகும். உலகில் ஒவ்வொரு இனத்துக்கும் அதன் மொழி, சமயம், பண்பாடு ஆகியவை தான் அடையாளமாகும். மதமாறுவதால் இந்த மூன்றுமே அழிக்கப்படுகின்றது. நேற்று அரேபியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற எல்லா நாடுகளிலும் உண்மையில் வெவ்வேறு பூர்வீக மக்கள் வெவ்வேறு மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்நிலை மாறி, அவர்களின் மொழி, பண்பாடு, சமயம் ஆகியவை மண்ணோடு மண்ணாகி விட்டன.

ஹிட்லர் என்பவன் யூதர்களை ஒட்டுமொத்தமாக அழித்து யூத மதம், மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்தான். நம் நாட்டின் மீதும் பலர் போர் தொடுத்து நம்மை அழிக்க முயன்றனர். இன்னமும் அழிக்க முயல்கின்றனர்.

சத்தியமே வெல்லும்

முண்டக உபநிடதம் பறைசாற்றும் “சத்தியமேவ ஜயதே” எனும் மந்திரத்திற்கு ஏற்ப சத்தியம் தான் இறுதியில் வெல்லும். சத்தியம் என்றால் தர்மம், தர்மம் தான் சத்தியம். (சந்தோக்கிய உபநிடதம்) இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் தர்மத்தை அடிப்படையாக கொண்ட சமயங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சமீப காலமாக நிறைய ஐரோப்பியர்கள் இந்துதர்மத்தைப் பற்றி ஆராய முன்வருகின்றனர். இந்துதர்மத்தைப் பற்றி ஆராய்ந்து ஆங்கிலம் உட்பட இதர ஐரோப்பிய மொழிகளில் வெளிவரும் புத்தகங்கள் பரவலாக உள்ளன. அவை இந்துதர்மத்தைப் பற்றி மிக தெளிவான ஒரு சிந்தனையை ஊக்குவிக்கின்றன. அவை நிறைய மக்களிடம் போய்சேர்வதால் இந்துதர்மத்தை பற்றிய ஒரு புது விழிப்புணர்வு உண்டாகின்றது. இந்த விழிப்புணர்வு மக்களிடம் ஒரு நல்ல விடியலை உருவாக்குகின்றது. சனாதன தர்மத்தின் புதுயுகம் மலரட்டும்! உலகமே இன்பமும் நிறைவும் சாந்தமும் அடையட்டும்!