August 10, 2022

கோத்தா ஜனாதிபதியானால் ஏற்படும் ஆபத்திற்கு கூட்டமைப்பே பொறுப்புக்கூறவேண்டும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகக் கூடிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுமானால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்கவேண்டும். ஏனெனில் கோத்தாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவிட்டாது கால நீடிப்பு எனும் பெயரில் இலங்கை அரசாங்கத்தையும் போர்க்குற்றவாளிகளான கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களையும் காப்பாற்றுவது கூட்டமைப்பே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக நேற்று (29) கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய ராஐபக்ச இருந்த காலத்தில் தான் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து உயிரோடு எதிர்த்தும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவரது நேரடி வழிகாட்டலிலேயே அத்தனை கொடுரங்களும் நடந்துள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அத்தனை கொடுரங்களையும் முன்னின்று வழிப்படுத்தியவே அவர் தான். ஆக அவர் மீண்டும் பதவிக்கு வந்தால் இன்னும் பலதையும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்யக் கூடிய அபத்தக்கள் இருக்கின்றன.

ஆகவே மொத்தத்தில் இந்த நாட்டின்; ஐனாதிபதியாக அவர் வந்தால் தமிழ் மக்களுக்கு நிச்சயமாக ஆபத்து தான் அந்த ஆபத்தை தடுக்க நிரந்தரமான வேலைகளைச் செய்ய தவறியிருக்கின்றனர். அதாவது அவரது தலைமையிலும் வழிகாட்டலிலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் அநீதிகள், கொடுமைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதி மூன்றுக்கு கொண்டு சென்று விசாரணைகள் நடைபெற்றிருந்தால் அவர் இன்றைக்கு தண்டிக்கப்பட்டிருப்பார்.

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. அவரைத்; தூக்குமேடைக்கு கொண்டு செல்வதையே தடுத்து கூட்டமைப்பினரே அவரைப் பாதுகாத்துள்ளனர்.

இவ்வாறு அவரைப் பாதுகாத்து பலப்படுத்தியிருப்பது சம்பந்தன் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு குழு தான் ஆக இந்த ஆபத்துக்களை விளங்கி கொண்டு கூட்டமைப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட அவர்கள் தண்டிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளைச் செய்திருக்க வேண்டும்  ஆனால் அதனைச் செய்ய அவர்கள் தவறியிருக்கின்றனர். ஆகவே இதனால் ஏற்படும் ஆபத்தை பொறுப்பேற்க வேண்டும் – என்றார்.