August 10, 2022

காணாமல் போனோர் அலுவலகத்தினை வரவேற்கிறார் சுரேன்!

இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகத்தினை தமிழ் தரப்புக்கள் நிராகரித்துள்ள நிலையில் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணிகள் எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும் .பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாமென்பதுடன்; குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம் எனவும் அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலிமை உள்ளது எனவும் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை உருவாக்குவோம்.துரித கதியில் அந்தப் பணிகள் நடக்க வேண்டுமென்று அதன் தலைவரிடம் கேட்டுள்ளேன்.அலுவலகம் அமைப்பதற்கான இடம் தயாராக உள்ளதாகவும் அதனடிப்படையில் அந்தப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 1977 ஆம் ஆண்டு முதல் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள போதிலும் இறுதிக் கட்டத்தில் சரியாக காணமல் ஆக்கப்பட்டோர் எவ்வளவு பேர் என்பது இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் எனவும் அதனை தன்னுடைய பதவிக்காக செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்வது தான் மனிதாபிமானம் எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.