August 18, 2022

மைத்திரி பின்வாங்குகின்றார்: மங்கள் தயாராகின்றார்?

தங்களால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரத்து செய்யக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுசார்ந்த கருத்தை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று ஊடக சந்திப்பு ஒன்றில் வைத்து வெளியிட்டிருந்தார்.
அவ்வாறு நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவை ஜனாதிபதி மீளப்பெறுவாராக இருந்தால், அது இரண்டு விதமான காரணங்களுக்கானதாக இருக்கலாம். 1. முறைப்படி நாடாளுமன்றத்தில் அதற்கான யோசனையை முன்வைத்து 3ல்2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றி நாடாளுமன்றைக் கலைக்க முயற்சிக்கலாம். 2. நாடாளுமன்றம் இன்னும் 2 வருடங்களுக்கு நீடிக்கும் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தங்களது பக்கம் தாவச்செய்யலாம்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு ஐக்கிய தேசிய கட்சி ஐந்து பேரை பரிந்துரை செய்துள்ளது. ஜேவிபியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தலா இருவரை பரிந்துரைத்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தெரிவுக்குழுவில் அதிக இடம் தங்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 7 பேரை பரிந்துரைத்திருந்தது. ஆனால் அந்த கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பில் நாளை காலை இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.
தெரிவுக் குழு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் நாளையதினம் நாடாளுமன்ற அமர்வில் கடுமையான அமளி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2020ம் ஆண்டு வரையில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும், அதற்கு முன்னதாகவே ஜனாதிபதி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனவென கொழும்பு ஊடகவியலாளர் விக்கினேஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய முன்னணி உறுதியாக இருக்கிறது. சஜீத பிரேமதாசவுக்கு முக்கியமான பொறுப்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சரியான சமயத்தில் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக்கப்படும்.
ரணிலும் மகிந்தவும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருந்த கருத்து, ஐக்கிய தேசிய கட்சியிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதிருப்தியில் இருக்கின்றனர்.
நீதிமன்றங்களில் இருக்கின்ற வழக்குகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல், அவை தொடர்பில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதன் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியான எந்த நியமனங்களையும் வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் பலருக்கு சட்டபூர்வமற்ற நியமனங்கள் வழங்க முயற்சிக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் புதிய பிரதமர் நியமனம் போன்ற விடயங்களை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்டு வந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை பதவி நீக்குவதற்கு, அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்க மற்றும் கம்பனிகளின் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நாளை மற்றுமொரு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும். ஆனால் தாங்கள் எலவே கூறியதைப் போன்று அடிப்படை வேதனமாக 1000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தொழிற்சங்கங்கள் இழந்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகம் மற்றும் அரசியல் யாப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசாங்கத்தின் செயற்பாடு இருத்தரப்பு உறவை பாதித்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் க்றிஸ் வேன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.