August 15, 2022

அலரித் தோட்டத்தை அடை காக்கிறார் ரணில்! பாம்புக்குப் பால் வார்க்கிறார் மைத்திரி! – பனங்காட்டான்

இலங்கை அரசியலில் இப்போது அதிர்~ஷ்ட எண்ணாகப் பார்க்கப்படுவது 113. இந்த எண்ணை எட்டிப் பிடிக்க கோடானுகோடி பணம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கையூட்டப்படுகிறது.
முன்பாய்ச்சல் நடத்திய சிலர் இப்போது பின்பாய்ச்சல் நடத்துகின்றனர். 13ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னரே அப்பம் சாப்பிடும் படலம் ஆரம்பமாகும். அதன் பின்னர் குதிரைப் பாய்ச்சலும் இடம்பெறும்.

சட்டம் ஓர் இருட்டறை என்று சொல்வார்கள்.அரசியல் யாப்பில் சட்டம் எதனைச் சொன்னாலும், அதனை அர்த்தப்படுத்தும்  பதம் பலவாறாக அமைவதால், சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பது அரிதாகி விடுகிறது. இதன் தார்ப்பரியத்தை இலங்கை என்கின்ற குட்டித் தீவு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவான மைத்திரி, அவருடன் சேர்ந்து பிரதமர் பதவிக்குத் தெரிவான ரணில், தமிழ் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இப்போது சட்டத்தின் ஓட்டையால் பிரதமர் ஆகியுள்ள மகிந்த என ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததும் புரிந்ததுமான வகையில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

தமக்கு விருப்பமான சட்டத்தெரிவை செயற்படுத்திய ஜனாதிபதி, இப்போது ஆப்பிழுத்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால், தம்மால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு ஆதரவாக ஆட்சேர்க்கும் அதிகாரியாக இவரே செயற்படுகிறார். இப்படியொரு நிலைமை இதற்கு முன்னர் இலங்கையில் வேறெந்த ஜனாதிபதிக்கும் ஏற்பட்டதில்லை.

அக்டோபர் 26ஆம் திகதி முதல் இற்றை வரையான நாட்கள் இலங்கையில் ஜனநாயகம் இறந்த நிலையில் காணப்படுகிறது. அரசியலமைப்பு பிராணவாயுவின்றி மூச்சிழுத்துக்கொண்டிருக்கின்றது. இரண்டு பிரதமர்கள், இரண்டு அமைச்சரவை என்ற விண்ணாணம் அங்கு காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் தலைமை அதிகாரியான சபாநாயகர் செல்லாக்காசாகியுள்ளார். அவரது கட்டளைகளுக்கு உட்பட்டுச் செயற்படவேண்டிய நாடாளுமன்ற செயலாளர்நாயகமும் மற்றும் அதிகாரிகளும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலின்படியே செயற்படுவோமென சபாநாயகருக்குச் சொல்கின்ற புதிய ஜனநாயகம் அங்கு தலைவிரித்தாடுகின்றது.

அரச கட்டமைப்புக்கு முக்கியமான ஏ.ஆர். எனப்படும் யுனஅinளைவசயவiஎந சுநபரடயவழைn, எஃப்.ஆர். எனப்படும் குiயெnஉயைட சுநபரடயவழைn என்பவற்றுக்குப் பதிலாக, எம்.ஆர். சுநபரடயவழைn (மகிந்த ராஜபக்ச சட்டம்) இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசாங்க அலுவலர்கள் கூறுகின்றனர்.
தம்மால் கொண்டுவரப்பட்ட பிரதமர் மகிந்தவின் கைப்பொம்மையாக மைத்திரி மாற்றப்பட்டுள்ளது அவரே எதிர்பாராத துன்பியல். இதற்கு உதாரணமாக யுரியூப்பில் ஒரு காட்சி வீச்சாகப் பரவியுள்ளது.
மைத்திரியும் மகிந்தவும் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காக பத்தரமுல்ல என்ற இடத்தில் கடந்த வாரம் பேரணியொன்று நடத்தினர். இரு தலைகளும் மேடையில் நிற்கும்போது தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. ஜனாதிபதி தம்மை மறந்து கூட்டத்தினருக்கு கைகளைத் தூக்கி அசைத்து ‚ஜெயவேவா‘ சொல்கிறார்.

இதனைக் கண்ட மகிந்தவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. பொதுமேடை என்றும் பார்க்காது மைத்திரியின் மணிக்கட்டில் ஒரு தட்டுத் தட்டி, அவரது கையைக் கீழே இறக்கியதோடு கடுமையான பார்வையுடன் ஏதோ சொல்கிறார்.

மைத்திரி பெட்டிப்பாம்பாகி விடுகிறார். இதனைக் கண்டவர்களுக்கு யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என்ற ஐயம் ஏற்படுகிறது.

ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின்படி ஜனாதிபதியைப் புறந்தள்ளி தமது சகோதரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சுவரொட்டிகளுக்கு மகிந்த உத்தரவிட்டுள்ளார்.

வெளியில் சொல்லாவிட்டாலும், ‚தெரிந்த பிசாசு தெரியாத பிசாசைவிட நல்லது‘ என்ற எண்ணம் மைத்திரிக்கு வந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை.

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் 16ஆம் திகதி கூடுமென முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் 5ஆம் திகதி என்றார்கள். அதன் பின்னர் 7ஆம் திகதி என்றார்கள். இறுதியாக 14ஆம் திகதி என்று வர்த்தமானி அறிவித்தல் வந்துள்ளது.

அன்றைய தினம் நாடாளுமன்ற அவையின் ஆசன ஒதுக்கீடு கேள்வியாகியுள்ளது. பிரதமர் ஆசனம் மகிந்தவுக்கு என்கிறது மைத்திரி தரப்பு. அது ரணிலுக்கே உரியது என்கிறார் சபாநாயகர். நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதியின் பக்கத்துக்கே செல்வார்கள் என்பது நிச்சயம்.

அன்றைய தினம் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மட்டுமே இடம்பெறும் என்கிறது மகிந்த தரப்பு. மகிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பும் அன்று நடத்தப்படும்  என்கிறார்    சபாநாயகர்.

இங்கு இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.
சிலவேளை அன்றைய தினம் புதிய சபாநாகர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாரானால், தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பதவி பறிபோகலாம்.

14ஆம் திகதிய சபை அமர்வுக்கு ரணில் விக்கிரமசிங்க சமுகமளிப்பாரானால், மீண்டும் அவர் அலரி மாளிகைக்குள் செல்ல முடியாதவாறு இராணுவம் அலரி மாளிகையை முற்றுகையிடக் கூடும்.
மகிந்தவின் அரசாட்சியில் எந்தப் பதவியும் வகிக்காது, ஆனால் எல்லாமகவிருக்கும் கோதபாய ராஜபக்ச திட்டம் ஏ, திட்டம் பி என இரண்டையும் தனது கைகளில் வைத்திருப்பதாக சிங்கள ஊடகங்கள் கூறுகின்றன.

மகிந்தவுக்கு பிரதமர் பதவியைத் தொடர 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இது கிடைக்காவிடின் அவர் பிரதமர் பதவியைத் தொடர முடியாது போகும். அதற்காக, அவர் சட்ட நியமங்களின்படி நடந்துகொள்வார் என்றில்லை.

113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரி கூறியதாலேயே, தாம் பிரதமர் பதவியை ஏற்றதாகக் கூறும் மகிந்த, தோல்வி ஏற்படின் அதனை இலகுவாக மைத்திரியின் தலையில் போட்டுவிடுவார். ஆனால், வெற்றி கிடைக்கின் அது தம்மால் கிடைத்தது என்று கூறத் தயங்கமாட்டார்.

சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், ரி~hத் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான மக்கள் முன்னணி ஆகிய நான்கையும் மைத்திரி தனித்தனியாக அழைத்து மருட்டியும், வெருட்டியும் பேசிக்கூட பலன் கிடைக்கவில்லை.

ஒவ்வொரு அணியிடமும் மும்மூன்று சலுகைகளை அல்லது அனுகூலங்களை மைத்திரி எடுத்துக் கூறினார். மந்திரிப் பதவிகள் வழங்குவது, மகிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டியது, முடியாவிடின் நடுநிலைமை வகிக்க வேண்டியது என்பவை இவர்களிடம் கேட்கப்பட்டது.

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக நேரடியாகக் கூறாது, ஜனாநாயக விரோத அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க முடியாதென இந்த நான்கு அணியினரும் இராஜதந்திரமாக மைத்திரியிடம் தெரிவித்தனர்.

இதில் கூட்டமைப்பின் நிலைப்பாடு தனித்துவமானது. தங்கள் வேண்டுகோளை ஏற்று தமிழ் மக்கள் எதிர்த்து வாக்களித்ததால் 2015இல் வீட்டுக்கு அனுப்பப்பட்ட மகிந்த, மீண்டும் ஆட்சிக்கு வர எவ்வாறு ஆதரவு வழங்குவது? நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கிக் காப்பாற்றினால் அடுத்த வருட தேர்தல்களில் எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் சென்று வாக்குக் கேட்பது என்ற அச்சம் கூட்டமைப்புக்குரியது.

இதனால், மகிந்தவை ஆதரிப்பதில்லை என்று ஏற்கனவே எடுத்த முடிவை கூட்டமைப்பு இறுதிவரை மாற்ற மாட்டாது என நம்ப இடமுண்டு.

ஆனால், மந்திப் பாய்ச்சல்   நடத்திய வியாழேந்திரன் மீண்டும் வீட்டுக்குள் வரப்போவதில்லை. கூட்டமைப்பிலி ருந்து அண்மையில் வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எஃப். இன் சிவசக்தி ஆனந்தன் அவையில் தனித்து இயங்குவார். ஆக, கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை இப்பொழுது 14 ஆக இறங்கியுள்ளது.

நித்தம் நித்தம் அமைச்சர்கள் நியமனம் இடம்பெறுகின்றது. எதிர்த் தரப்புகளிலிருந்து எவராவது வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் சில அமைச்சர் பதவிகள் நிரப்பப்படவில்லை.

மகிந்தவின் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பங்காளிகளான தேசிய விடுதலை முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இதுவரை அமைச்சர்களாக நியமிக்கப்படவில்லை? இவர்கள் பதவிகளை ஏற்க மறுத்துள்ளார்களா?

இம்மாதம் 14ஆம் திகதி மைத்திரி – மகிந்த அரசு போதிய பலமின்றி கவிழலாம் என்ற நினைப்பு சிலரிடம் உள்ளது. அப்படி நடைபெற்றால் ‚இரண்டு வார மந்திரிகள்“ என்ற பட்டத்தைச் சுமக்க இவர்கள் தயாரில்லை.

ஆட்சிப் பலத்தை நிரூபிக்க போதிய ஆட்கள் இருக்கின்றார்கள் என்றால் 14ஆம் திகதி வரை காத்திருக்காது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சவால் விட்டுள்ளது.

உரிய நேரத்தில் தனது பலத்தைக் காட்டும் துரும்பு தம்மிடம் இருப்பதாக மைத்திரி பதிலளித்துள்ளார்.

தற்செயலாக தமது தரப்புக்குப் போதிய பலமில்லையானால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தவும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க ராஜபக்ச குடும்பம் விரும்புகிறது.

மைத்திரியை அவன், இவன் என்று ஏகவசனத்தில் திட்டித் தீர்த்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு வரவில்லையென்றால் அரசியலிலிருந்து ஒதுங்குவாரா என்ற கேள்வியும் மீள முனைப்புப் பெற்றுள்ளது.

அடுத்து என்ன நடைபெறும் என்பது தெரியாத நிலையில் அலரித் தோட்டத்தை அடைகாத்து வருகிறார் ரணில், பாம்புக்குப் பால் வார்த்துக்கொண்டிருக்கிறார் மைத்திரி.

அந்தப் பாம்பு அலரித் தோட்டத்துள் குடிபுகுந்த பின்னர்தான் நல்ல பாம்பா அல்லது விசப் பாம்பா என்பதை அடையாளம் காணலாம்.