August 9, 2022

குரோதங்களை மறந்து கூட்டு:சி.வி.விக்கினேஸ்வரன்!

பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியமென முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் முன்னணி தலைவருமாக சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரிடம் ஒரு மக்கள் அரசியல் பேரியக்கத்தினையும் அதேநேரம் ஒத்த கொள்கைகளை உடைய அனைத்து தரப்பினரையும் ஒன்றாகச் சேர்த்து, பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் வலுவாக கூறப்பட்டு வரும் நிலையை இப்போது நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?  என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அற்கு பதலிளித்துள்ள அவர் நாங்கள் யாவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது. ஆனால் கொள்கை ரீதியாக நாம் பயணிக்க விரும்பினால் எம் கட்சிகளின் நலவுரித்து பின் ஆசனத்திற்குப் போக வேண்டி வரும். கட்சி நலன்களையும் எமது முன்னைய பின்னணிகளையும் மற்றையவர்களின் முன்னைய பின்னணிகளையும் கணக்கில் எடுத்து பயணிக்கத் தொடங்கினோமானால் எமது ஒற்றுமை குலைந்து விடும். ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமைப் படப் பார்க்கின்றன. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. கட்சிகள் தமது கொள்கைகளில் திடமாக இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் ஒரே கொள்கைகளில் இருக்கும் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளில் இறங்குவதில் பிழையில்லை என்றே நான் நினைக்கின்றேன். எமது கொள்கைகள் மக்களுக்காக இயற்றப்பட்டவை. நாம் அவ்வாறான பொதுக் கொள்கைகளை இயற்றி விட்டு சிலரின் முகங்கள் எமக்குப் பிடிக்கவில்லை என்று ஒதுங்கிச் செல்வது மக்களுக்குத் துரோகம் செய்யும் செயலாக முடியக் கூடும். கட்சிக்காக மக்களின் நலவுரித்துக்களை உதாசீனம் செய்வதாக முடியும்.
நான் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டதன் அவசியத்தை தமிழ் மக்கள் பேரவை நடத்திய கூட்டத்தில் விளக்கியுள்ளேன். நான் எனது உரையில் முன்னர் நான் கூறிவந்த 4 தெரிவுகளில் 3 ஆவது தெரிவை எடுக்க வேண்டியதன் அவசியத்தையுங் கூறியுள்ளேன். நான் மக்கள் இயக்கம் பற்றி அங்கு குறிப்பிட்ட ஒரு கருத்து தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மக்கள் இயக்கத்துக்கு தலைமை தாங்குவது என்பது அதிகாரம் அற்ற இயக்கத்தின் ஆதங்க வெளிப்பாடாக இருக்கும் என்று கூறியது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் இயக்கப் போராட்டங்களின் அவசியத்தையோ அல்லது அவற்றின் வெற்றியையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை.  உலக வரலாறுகளில் மக்கள் இயக்க போராட்டங்களின் சாதனைகள் பற்றி பல உதாரணங்களைக் கூற முடியும். அண்மைக் காலங்களில் எமது மக்கள் எந்த அரசியல் கட்சிகளின் பின்புலமும் இன்றி பல போராட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள்; நடத்தியும் வருகின்றார்கள். கேப்பாப்பிலவில் மக்கள் நடத்திய போராட்டம் இதற்கு சிறந்த உதாரணம். ஆனால் மக்கள் போராட்டங்களினால் அடைய முடியாத பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை அரசியல் ராஜதந்திர போராட்டங்களின் மூலம் அடைய முடியும் . அதேபோல அரசியல் ராஜதந்திர போராட்டங்கள் மூலம் அடைய முடியாத பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை மக்கள் இயக்க போராட்டங்கள் மூலம் அடைய முடியும். சாத்வீக அடிப்படையிலான மக்கள் இயக்கப் போராட்டங்கள்  நாம் யாருக்கு எதிராக போராடுகின்றோமோ அவர்களின் „மனசாட்சியை “ அசைத்துப்பார்ப்பதன்  ஊடாக வெற்றி பெற எத்தனிப்பவையாகும் ஒத்துழையாமை இயங்கங்கள் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள்  ஆட்சியாளர்களின் அதிகாரத்துக்கு சவால் இடுவதன மூலம் வெற்றி பெற மேற்கொள்ளப்படுகின்றன. இவை இரண்டுமே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு எதிராக பெருமளவில் பயன்படுத்தப்பட முடியாதவை என்பதையே வரலாற்றின் மூலம் நாம் பார்க்கின்றோம். மகாவம்ச மன நிலையில் பௌத்த சிங்கள பேரினவாத கோட்பாடுகளுக்கு அமைவாக தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த பல தசாப்தங்களாக சிங்கள ஆட்சியாளர்களினால் நன்கு திட்டமிடப்பட்டு கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகளை அவர்களின் மன சாட்சியினை அசைப்பதன் மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று நினைப்பது எமது மக்களின் வெறும் ஆதங்க வெளிப்பாடே. அவர்கள் மனசாட்சி அசரப் போவதுமில்லை அசைந்து கொடுக்கப் போவதும் இல்லை. இதுவே வரலாறு.  எமது அரசியல் கைதிகளின் பல உண்ணாவிரத போராட்டங்கள்  சிங்கள ஆட்சியாளர்களின் மனசாட்சியை உலுக்கியதா? ஆனாலும் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் எமது மக்களின் மனசாட்சியை  தட்டி விட்டுள்ளன. இது  அடக்குமுறைக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்ற போராட்ட சிந்தனையை எம்முள் வலுப்படுத்த உதவியுள்ளது. மக்களை அரசியல் சமூக ரீதியாக அணிதிரட்ட உதவியுள்ளது.
அதேபோல, எமக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட பாகுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எமக்கான அதிகார பரவலாக்கம் வேண்டியும் நாம் அகிம்சை வழியில் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஆட்டம் காணச் செய்யவில்லை. மாறாக நாம் எதிர்பார்த்தவற்;றை அடைய முடியாது போனதே வரலாறு. இதற்கு காரணம் எண்ணிக்கை அடிப்படையில் தமிழர்கள் மிகவும் குறைவாக இருப்பதே. எமது குறைந்த எண்ணிக்கை மக்களால் சாத்வீக மக்கள் இயக்க போராட்டங்களின் மூலம் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரத்தை அசைக்க முடியாமல் போய்விட்டது. இந்தியாவில் மகாத்மா காந்தி கோடிக்கணக்கான இந்திய மக்களை ஒன்று திரட்டி எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஆட்டங் காண வைத்து வெற்றிபெற்றார். உப்பு சத்தியாக்கிரகம் இதற்கு சிறந்த உதாரணம். இதுவே தென் ஆபிரிக்காவிலும் நடந்தது.
ஆனால் இலங்கையில் அகிம்சை வழியிலான போராட்டங்களின் மூலம் சிங்கள ஆட்சியாளர்களின் அதிகாரத்தை அசைத்து அபிலாஷைகளை வென்று எடுக்க முடியாததால் எம் மக்களின் நிலை வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருந்துவந்துள்ளது.  ஆகவே தான் எமது மக்கள் அகிம்சை வழியிலான மக்கள் போராட்டங்கள் மூலம் சிங்கள ஆட்சியாளர்களின் மன சாட்சியை உலுக்குவதன் மூலமோ அல்லது அவர்களின் அதிகாரத்துக்கு சவால் இடுவதன் மூலமோ அவர்களின் நன்கு திட்டமிடப்பட்ட நிறுவன மயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்த வைத்து எமது அபிலாஷைகளை வென்றெடுக்கலாம் என்ற எமது நோக்கம் என்பது வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளது என்று கூறினேன். அந்த விதமான ஆதங்கமே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாகும்.
இன்றைய காலகட்டத்தில் எமது இலக்குகளை அடைவதற்கு அரசியல் மற்றும் ராஜதந்திரப் போராட்டம் எமக்கு மிக அவசியமாக காணப்படுகின்றன.  அதேசமயம்  எமது மக்கள் மத்தியில் நான் முன்னர் குறிப்பிட்டவாறு,  அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் சிந்தனையை எழுச்சி பெற வைப்பதற்கும், சந்ததிக்குப் பின் சந்ததியாக வெற்றி பெறும்  வரை போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அரசியல் சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக எம் மக்களை வலுப்படுத்துவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் எமது போராட்டம் பற்றிய நியாயத்தை, உண்மையை எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் போராட்டம் மிக மிக அவசியமாகின்றது. இந்த நோக்கத்துக்காகவே தமிழ் மக்கட் பேரவை தோற்றுவிக்கப்பட்டது. எமது குறிக்கோள்களை அடைவதற்காக தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து மக்கள் இயக்கமாக செயற்படும். தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக அரசியல் ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை நான் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை ஊடாக மக்கள் இயக்க போராட்டங்களிலும் ஈடுபடுவேன். இந்த இரண்டு வகையான போராட்டங்களும் இன்றைய காலகட்டத்தில் அவசியமானவை. நான் எனது உரையில் குறிப்பிட்டபடி பழைய குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியம் என்பதே எனது விருப்பமென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.