August 13, 2022

கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: வெளியான உண்மை தகவல்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.

இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானம் சென்ற போது 13 வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானம் இழந்தது.

அந்த விமானம் சுமத்ரா பகுதியில், கடலில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் கைக்குழந்தை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதில், விமானம் கடலில் விழுவதற்கு அந்தக் குழந்தையின் அன்னை, குழந்தைக்கு உயிர்க்காக்கும் உடையை அணிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் தண்ணீரில் மிதந்த குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையின் தாய் உயிரிழந்துவிட்டார் எனவும் அந்தக் குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தத் தகவல் உண்மையல்ல. முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது. உண்மையில் அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டதல்ல.

அது கடந்த யூலை மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட படகு விபத்தின் போது மீட்கப்பட்ட குழந்தை என்று கூறப்படுகிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

இந்தப் புகைப்படம் 24 மணி நேரத்திற்குள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.