August 17, 2022

துயர் பகிர்தல் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் !

மரியாதை வணக்கத்துடன் விடைபெற்றார் ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் !

புலம்பெயர் தமிழ் ஊடகப்பரப்பின் ஆளுமைகளில் ஒருவராகிய ஊடகர் ஞானசேகரம் ராஜாஜி சிறிதரன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

தலைநகர் பரிசில் அமைந்திருக்கின்ற பெர் லாசெஸ் கல்லறைத்தோட்டத்தில் அன்னாரின் உடல், இறுதி மரியாதை வணக்கத்துக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இலங்கையில் தினபதி பத்திரிகையில் செய்தியாளராக தனது ஊடகப்பணியைத் தொடங்கிய அமரர் அவர்கள், பிரான்சில் புலம்பெயர்ந்து வாழ்ந்த காலத்தில் ரீரீஎன் தொலைக்காட்சி, ஏ.பி.சி வானொலி, ஜீ.ரீ.வி தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களின் செய்திப்பிரிவில் பெரும்பங்காற்றியவர்.

பன்மொழி ஆளுமையும், அறிவியல்பூர்வமாகவும் ஆய்வுரீதியாகவும் செய்திகளை அணுகி, ஈழத்தமிழ் நோக்கு நிலையில் இருந்து செய்திகளை மக்களுக்கு வழங்கிய ஊடக ஆளுமையாக திகழ்ந்தவர்.
சமூக-அரசியல் தளத்திலும் விமர்சகராக திகழ்ந்த அன்னார் அவர்கள், கவிதையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார்.

அன்னாரின் இறுதி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தோழமைகள் என பலரும் பங்கெடுத்திருந்ததோடு, அவரது ஆளுமைகள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தன.