August 15, 2022

நிதி தன்னிச்சையாக ஒதுக்கீடு: பிரச்சினைக்கான காரணமதுவே!

வடமாகாணசபையினை தவிர்த்து மத்திய அரசு மாவட்ட செயலர்கள் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை பாடசாலைகளிற்கு விடுவித்து வருகின்றது. இதனால் வடமாகாண கல்வி அமைச்சு உரிய திட்டமிடல்களை முன்னெடுக்கமுடியாதிருப்பதாக அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்குச் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கருமமொழிகள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியை மாகாணத் திறைசேரிக்கு மாற்றுமாறு கோரியதனால் இந்நிதி குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு கிடைக்காமல் கைநழுவிப்போயுள்ளதாக வெளியாகியிருக்கின்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு தனது கட்டுமானப்பணிகளுக்காக ஒரே ஒரு பொறியியலாளர் மற்றும் 16 தொழில்நுட்ப அலுவலர்கள் 14 வேலை மேற்பார்வையாளர்கள் ஆகியோருடன் செயற்பட்டு வருகின்றது. இவ்வாளணியே இந்த ஆண்டிற்கான 900 மில்லியனுக்கான பல்வேறு வேலைகளை பல்வேறு வலயங்களில் முன்னெடுத்து வருகின்றது. இப்பிரிவானது மிகுந்த ஆளணி பற்றாக்குறையுடன் செயற்பட்டுவருகின்றது. இதனால் எமது மாகாண திறைசேரிக்கு கிடைக்கப்பெற்ற நிதியில் மேற்கூறப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 1926 மில்லியனுக்கான நிர்மாண வேலைகளை மாகாண கட்டடத் திணைக்களம் ஊடாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எமது ஆளணி பற்றாக்குறையினை நீக்குவதற்கும் விரைந்து வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் எங்களுக்கு புதிய  ஆளணியை உருவாக்குவதற்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு  கடந்த ஆண்டே விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆளணிப்பற்றாக்குறை தொடர்பாக பிரதம மந்திரி தலைமையில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய மீண்டும் பிரதமரின் செயலாளரிற்கு 09.01.2018 அன்று பிரதம செயலாளரினால் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் இன்றுவரை இப் பற்றாக்குறை நீக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
1010 மாகாணப்பாடசாலைகளைக் கொண்டு இயங்குகின்ற மாகாண கல்வி அமைச்சு ஒரே ஒரு அனுமதிக்கப்பட்ட பொறியியலாளர் மற்றும் மிகக்குறைந்த ஆளணியுடன் செயற்படுவதால் நிர்மாணப் பணிகளில் தாமதம் ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகின்றது. தற்போது வருடம் முடிவதற்கு இரண்டரை மாதங்களே உள்ள வேளையில் இந்த பாடசாலைகளுக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டிற்குள் செயற்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றதாகும். காரணம் வரைபடம், மதிப்பீடு ஆகியவற்றை ஒரு திட்டத்திற்கு செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை. மேலும் ஒப்பந்த நடைமுறைகளைப்பின்பற்றி வேலைகளை வழங்குவதற்கு குறைந்த பட்சம் ஒன்றரை மாதங்கள் தேவை. இவற்றை மேற்பார்வையிடுவதற்கும் அறிக்கையிடுவதற்கும் எமது தற்போதுள்ள ஆளணியினைக்கொண்டே செய்ய வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே சிறிய வேலைத்திட்டங்களை இந்த ஆண்டு நிறைவுக்குள் செயற்படுத்த முடியும் என்றும் ஏனையவற்றுக்கு சற்று காலஅவகாசம் தேவை எனவும் தெரிவித்திருந்தோம். இதனடிப்படையில் இப் பாடசாலைகளுக்கான வேலைத்திட்டங்களை தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மாகாணக்கல்வி அமைச்சும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
மேலும் வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்குரிய பௌதீக வளத் தேவைகள் 22 தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சுக்களுக்கு அனுப்புவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இதனைப் பின்;பற்றி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியானது மாவட்ட இவலய ஏற்றத் தாழ்வின்றி சீரான வளர்ச்சியைப் பெறும்.
மேலும் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத் துறையின் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக மாகாணக் கட்டடத் திணைக்களம் உள்ளிட்ட பொறியியலாளர்களின் ஒத்துழைப்பையும் பெற்று செயற்பட்டு வருகின்றது. பௌதீக வளங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி மாகாணத் திறைசேரிக்கு வரும் பட்சத்திலேயே மேற் கண்ட திணைக்களங்களின் தொழில்நுட்ப உதவியைப்பெற்று உரிய காலத்தில் முடிக்க முடியும். மாறாக அரசாங்க அதிபர் ஊடாக நிதி அனுப்பப்படும் பட்சத்தில் பல்வேறு நிர்வாக சிக்கல்களும் காலவிரயமும் ஏற்படுவதுடன் மாகாணக்கல்வி அமைச்சின் பற்றாக்குறையான ஆளணியே இத்திட்டங்களை பொறுப்பேற்பதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. எனவே இனிவரும் காலங்களில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் பௌதீக வளங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் போது மாகாண அமைச்சுடன் ஆலோசித்து அவர்களின் முன்னுரிமைப்பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கீடுகளை தீர்மானிக்கவும் அவ் ஒதுக்கீடுகளை மாகாணத் திறைசேரிக்கூடாக செயற்படுத்த சம்பந்தப்பட்ட  அமைச்சுக்களைக் கேட்டுக்கொள்கின்றோமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.