அகமுரண்பாடுகளுக்கு அப்பால் சென்று புறநிலை யதார்த்தத்தை புரிவது நன்று – பனங்காட்டான்

வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற அகமுரண்பாட்டை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு தெற்கில் மாற்றம்பெற விரும்பும் எதேச்ச அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து நிலையான தீர்வை நோக்கிப் பயணிப்பதற்கு தமிழர் தலைமை முன்னுரிமை கொடுக்க வேண்டியது இன்றையகாலத் தேவை

இலங்கையில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், அது தமிழர் தரப்பாக இருந்தாலென்ன அது சிங்களத் தரப்பாக இருந்தாலென்ன எல்லாமே சிதம்பர சக்கரமாகியுள்ளது.

புதிய அரசியலமைப்புஇ அரசியல் தீர்வு, அபிவிருத்தி நடவடிக்கை, காணாமலாக்கப்பட்டோருக்கான விசாரணைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்பதெல்லாம் கானல் நீராகிக் கொண்டிருக்கின்றன.

இப்போது தலைதூக்கியுள்ள அதிமுக்கிய பிரச்சனை வாக்குப்பெட்டி அரசியல்.

வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ரணிலா, மைத்திரியா, அல்லது ராஜபக் குடும்ப அங்கத்தவரா, அடுத்த பிரதமராக மகிந்த வருவாரா என்ற பல தொடர் கேள்விகளால் வாக்காளப் பெருமக்கள் திண்டாட ஆரம்பித்துள்ளனர்.

வடமாகாண சபையின் ஆயுட்காலத்துக்கு இன்னமும் சுமார் நாற்பது நாட்களேயுள்ளன. அக்டோபர் 25ஆம் திகதியுடன் இதன் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதற்கிடையில் இன்னமும் இரண்டு அமர்வுகளே இடம்பெறும். இறுதி அமர்வு அக்டோபர் 28ஆம் திகதியென அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ஆம் திகதியே சி. வி. விக்னேஸ்வரனின் 79வது பிறந்தநாள். அதாவது 80ஆவது அகவையில் அவர் பாதம் பதிக்கும் நாள். இதற்காகவே இந்த நாளை இறுதி அமர்வுக்குத் தெரிவு செய்துள்ளதாக சபைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் அவர்களை மாகாண சபைத் தலைவர் பதவியிலிருந்து வெளியேற்ற தமிழரசுக் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுனரிடம் நேரில் சென்று கையளித்தவர் இதே சிவஞானம் என்பதை இலகுவாக மறந்துவிட முடியாது.

அதன் பின்னர் அமைச்சரவை மாற்றங்களின்போது முதலமைச்சருக்கு எதிரான செயற்பாடுகளை ஊதிப்பெருப்பித்தவரும் இவரே. இப்போது, முதலமைச்சருக்கு பிறந்நாள் பரிசாக, பிரியாவிடை அளிப்பற்காக அக்டோபர் 23ஆம் திகதி சபையின் இறுதி அமர்வை இவரே கூட்டுகின்றார்.

என்ன மரியாதை! எவ்வளவு அக்கறை! 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் பங்காளிக்கட்சிகளின் தலைமைகளும் சரியாகச் செயற்பட்டிருந்தால் வடக்கு மாகாண சபையில் இவ்வளவு குழப்பங்களும் பிரச்சனைகளும் உருவாகியிருக்க மாட்டாது என்று சி.வி.கே. சிவஞானம் இப்போது கூறுவதைப் பார்க்கையில், அழுதுகொண்டே சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது.

ஐந்தாண்டுகள் சபையின் தலைவராக இருந்த இவர், கட்சி வேறுபாடுகளை மறந்து சீர்துக்கும் தராசு போல செயற்பட்டிருந்தால் பிரச்சனைகளை சமாளித்து அல்லது தீர்த்து வைத்திருக்கலாம் என்பதை இப்போதுதான் உணர்கிறாரோ?

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பது இதுதான். 

அடுத்த வட மாகாண சபைத் தேர்தல் (எப்போது என்று தெரியாது) கூட்டமைப்பின் பிரதிநிதியாக விக்னேஸ்வரன் போட்டியிட மாட்டார் என்பது ஓரளவு உறுதியாகிவிட்டது. அவரது அண்மைக்கால அறிக்கைகள் இதனைத் துல்லியமாகக் காட்டுகின்றன.

அண்மையில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் இரண்டே சாத்தியப்படக் கூடியவை. எனினும் நான்காம் தெரிவே இவருக்கு இப்போதுள்ள நிலமையில் பொருத்தமானதாக பலராலும் பார்க்கப்படுகிறது.

இந்த நான்காம் தெரிவை அவர் முடிவாக்குவாரானால், கூட்டமைப்பு அடுத்த தேர்தலில் பெரும் சவாலைச் சந்திக்கும். சி.வி.கே. சிவஞானம் பிரேரித்துள்ள மாவை சேனாதிராஜாவா, சுமந்திரன் விரும்பும் சத்தியலிங்கமா கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் என்பது நிச்சயமாக அகத்துக்குள் ஒரு பிரச்சினையை எழுப்பும்.

இது இவ்வாறு போய்க்கொண்டிருக்க, இந்தியா சென்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அரசியற் கட்சியின் குழுவில் ஒருவரான இரா. சம்பந்தன், இந்தியப் பிரதமருடன் உரையாடியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

புதிய அரசியல் முயற்சி தோல்வி கண்டால் நாட்டில் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்புண்டு என்று தாம் மோடியிடம் கூறியதாக சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். (மாவை சேனாதிராஜா அடிக்கடி கூறும் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்பது போல இது இருக்காது என நம்புகிறோம்).

2016ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு வரும் என்று ஆரம்பித்து, பின்னர் அடுத்த பொங்கலுக்கு முன்னர், அடுத்து தீபாவளிக்கு முன்னர், அடுத்த வருடப்பிறப்புக்கு முன்னர் தீர்வு வரும் என்று நம்பிக்கை ஆருடம் சொல்லிவந்த சம்பந்தன், சொன்னவை யாவும் இலங்கைக்களத்தே விட்டு மிகத்துணிச்சலாக பிரதமர் மோடியிடம் மீண்டும் போர் வருமென்று எடுத்துக் கூறியுள்ளார்.

இப்படியாக அடித்துக்கூறிய இவர், புதிய அரசியலமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இது எப்படி இருக்கு? 

வரும் ஆனால் வராது என்ற புகழ்பெற்ற சினிமாச் சொல்லாடல் போலுள்ளது சம்பந்தனின் நம்பிக்கைப் பித்தலாட்டம். அவரைப் பொறுத்தளவில் அரசியல் தீர்வு என்பது குருட்டு நம்பிக்கைதான்.

சபாநாயகர் தலைமையிலான அரசியல்வாதிகள் குழு இந்தியாவில் நின்ற வேளையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான மூவர் குழுவொன்றும் அங்கு சென்றது.

எதிரும் புதிருமான இரண்டு குழுக்களும் சமகாலத்தில் எவ்வாறு இந்தியா சென்றன என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு மட்டுமே தெரியும்.

சபாநாயகர் குழுவை இந்திய அரசாங்கம் அழைத்தது. அங்கு ஆட்சி புரியும் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரமுகரான சுப்பிரமணிய சுவாமியின் அழைப்பில் மகிந்த குழு இந்தியா சென்றது.

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை சென்ற சுப்பிரமணிய சுவாமி நேரடியாக விடுத்த அழைப்பை ஏற்று மகன் நாமல் ராஜபக்ச மற்றும் பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் மகிந்த இந்தியா சென்றிருந்தார்.

இருதரப்பு விஜயங்களும் ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டத்திற்கான முன்னேற்பாடு என்று சிங்கள இணையமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் நின்று வெளியிட முடியாத அல்லது வெளியிட விரும்பாத முக்கிய விடயங்களை, இந்தியாவில் நின்று மகிந்த பகிரங்கமாக வெளியிட்டுள்ளதை நுணுக்கமாக அவதானிக்க வேண்டும்.
அதற்கு முன்னோடியாக, அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் சுப்பிரமணிய சுவாமி மகிந்தவை அறிமுகம் செய்கையில் “இவர்தான் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி” என்று கூறியதற்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவை ஜனாதிபதியாக முடியாது என்ற அத்தியாயம் பற்றி இருவேறு வகையான வியாக்கியானங்கள் உண்டு.

மகிந்தவை அடுத்த ஜனாதிபதியென்று அறிமுகம் செய்ததன் பின்னணியில், இந்திய அரசியல் ஏதாவது உள்ளிருக்குமா என்ற சந்தேகத்தை சாதாரணமாக தட்டிக்கழிக்க முடியாது.

அதேசமயம் இந்திய ஊடகமொன்றுக்கு, மகிந்த அளித்த பேட்டியில், தமது சகோதரர் ஒருவரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தங்களின் அணியில் நிறுத்தப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

தமது மகன் நாமலுக்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வயது போதாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இந்தக் கூற்றுகள் வாயிலாக தெரியவரும் ஓர் உண்மை என்னவெனில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு மட்டுமே இந்தப் பதவிகளுக்கு வர வாய்ப்பும் அருகதையும் உண்டென மகிந்த நினைப்பது.

மகிந்தவின் சகோதரர்களான சமல் ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் மகிந்தவின் கை அசைவைப் பார்த்துக்கொண்டு வரிசையில் நிற்கின்றனர்.

இவர்களில் யாரை மகிந்த முதல் நிலையில் வைத்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும் அடுத்த பொதுத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றி முதலில் பிரதமராகி, பின்னர் ஜனாதிபதியாக வருவதே மகிந்தவின் திட்டம். அதற்காக தமது சொற்கேட்டு நடக்கும் ஒருவரை ஜனாதிபதியாக்கி, பின்னர் அவரை பதவி விலகச்செய்து, தாம் அந்தக் கதிரையில் ஏறலாம் என்னும் மகிந்தவின் திட்டம் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை.

தெற்கில் மட்டுமன்றி தமிழர் தரப்பிலும் எழும்பியிருக்கும் முக்கிய கேள்வி, அடுத்த ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் என்பது.

கடந்த தேர்தலில் ஆதரவு வழங்கி ஆட்சிபீடமேற்றிய ரணில் – மைத்திரி கூட்டாட்சி, தமிழர் தலைமையோடு செய்ததாகச் சொல்லப்படும் கனவான்கள் ஒப்பந்தத்தின்படி தமிழர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஓரங்கட்டும் சதிவேலைகளில் நேரத்தை வீணாக்காது, எஞ்சியுள்ள குறுகிய காலத்தை அரசியல் தீர்விற்கு கூட்டமைப்பு முன்னுரிமை கொடுக்க வேண்டியது, காலத்தின் கடமை மட்டுமன்றி காலத்தேவையுமாகும்.

தாயகச்செய்திகள்