August 11, 2022

இலங்கையின் இறுதிப்போர் குறித்து சரத் பொன்சேகா கூறுவது எல்லாம் பொய்!!!

இறுதிப் போரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தகவல்கள் முழுப் பொய் என்று இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் இருந்தவரும் தற்போது வடக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினருமாக இருக்கின்ற சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் 5000 ஆயிரம் வரையிலான பொது மக்களே கொல்லப்பட்டிருந்ததாக போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்தவரும் தற்போது வனஜீவராசிகள் அமைச்சராகவும் இருக்கின்ற பீல்ட் மார்சர் சரத் பொன்சேகா சில தினங்களிற்கு முன்னர் தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கொல்லப்பட்டிருந்தால் அங்கு மண்வெட்டும் இடமெல்லால் மனித எச்சங்களே கண்டுப்பிடிக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்ட பொன்சேகா அங்கு 30 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம் பொய் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் சரத் பொன்சேகாவின் கருத்தை அடியோடு மறுதலித்துள்ள மாகாண சபை உறுப்பினர் பொன்சேகாவே தற்போது பொய்களைக் கூறி வருகின்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொன்சேகாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள குகதாஸ் தெரிவித்துள்தாவது..

இறுதிக் கட்டப் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக பொன்சேகா தெரிவித்திருக்கின்ற எண்ணிக்கை முழுப் பொய் ஆகும்.

ஏனெனில் இறுதிக் கட்ட யுத்தம் முள்ளிவாய்க்காலில் நடக்கின்ற போது பத்தாயிரம் மக்களும் ஆயிரம் புலிகளுமே இருப்பதாக அறிக்கையை விட்டவர் பொன்சேகா.

ஆனால் 2009 ஆம் ஆண்டு 375000 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்றனர். அதே போன்று சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளும் 18000 ஆயிரத்திற்கும் அதிகம்.

ஆனாலும் 12000 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருபவரே பொன்சேகா.

ஆகவே இன்னும் சில காலம் செல்ல இறுதிப் போரில் மக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்று அவர் சொல்வதற்கும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

உண்மையில் இறுதிப்போரில் குறிப்பாக இறுதி நாட்களில் 50000 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். அதேவேளை இறுதி யுத்தத்தில் 120000 இற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சுதந்திரபுரம். தேவிபுரம், இருட்டுமடு. முங்கிலாறு, வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு, கோம்பாவில், ஆனந்தபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன்,

பொக்கணை, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், வெள்ளாம்முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், கரையாம் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் போன்ற இடங்களில் கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களும் சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களை பல இடங்களிலும் பாரிய குழிகள் வெட்டி மனித நேயப் பணியாளர்கள் புதைத்திருந்தனர்.

மேலும் இறுதி நாட்களில் வீதிகளிலும் பதுங்கு குழிகளிலும் கடற்கரைகளிலும் வட்டுவால் வாய்க்காலிலும் பல ஆயிரக்கணக்கான மக்களின் உடல்கள் கிடந்தன.

இவ்வாறான நிலைமைகள் இருக்கின்ற போதிலும் பல மக்கள் கொல்லப்பட்டதற்கான தடையங்கள் இல்லை என பொன்சேகா கூறியுள்ளார்.

ஆனால் அவ்வாறு மக்கள் கொல்லப்பட்டதற்கான உண்மையான தடையங்கள் யாவும் கடந்தகால அரசு குறிப்பாக பாதுகாப்பு அமைச்சரின் கோட்டாபாய ராஜபக்ச காலத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியை பார்வையிட வரப்போகிறார் என்றதும் அப்பகுதியில் உள்ள தடையங்கள் அவசர அவசரமாக அழிக்கப்பட்டன.

அத் தடையங்கள் யாவற்றையும் இராணுவத்தை பயன்படுத்தி அசிற் வீசி எரித்தும் மண்ணில் புதைத்தும் இல்லாது அழித்தனர்.

இதனை பல ஊடகங்கள் அப்போதே வெளிக்கொண்டு வந்திருந்தன. ஆகவே தடயங்கள் எல்லாத்தையும் அழித்துவிட்டு இப்பொது இவ்வளவு தொகையான மக்கள் கொல்லப்படவில்லை என்றும் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மனித எச்சங்களே அங்கு வருமென்றும் பொன்சேகா கூறுவதானது ஏற்றுக் கொள்ளத் தகக்கதல்ல.

அவ்வாறு அவர் கூறுவது அப்பட்மான பொய் தான் என்று குகதாஸ் மேலும் தெரிவித்தார்.