August 13, 2022

கொழும்புக்கு ஒரு முகம்! தமிழர்களுக்கு ஒரு முகம்! ஏமாற்றுகிறது கூட்டமைப்பு!

கடந்த வியாழக்கிழமை காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வமான பேச்சாளர்  சுமந்திரனிடம் சிங்கள நபரொருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்மக்களுக்குச் சமஷ்டி வேண்டாமெனச் சிங்களத்தில் பதிலளித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள மாகாணசபை முறைமையை திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்ளத் தமிழ்மக்கள் தயாரெனவும், அவ்வாறானதொரு தீர்வுக்குத் தமிழ்மக்கள்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஆணை வழங்கியுள்ளதாகவும் சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகிறார்கள் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கிளை அலுவலகத் திறப்பு விழாவும் மரநடுகை நிகழ்வும் நேற்றுச் சனிக்கிழமை(01) யாழ். இணுவிலில்  இடம்பெற்றது.  கட்சியின் வலி. தெற்கு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்மக்களிடமிருந்து தன்னைப் பாதுகாப்பதற்காக விசேட அதிரடிப்படையினரை சிங்கள அரசியல் தலைவர்கள் வழங்கியுள்ள நிலையில் அந்தத் தலைவர்களிற்கு நேர்மையாகச் செயற்பட்டுத் தன்னுடைய சொந்த இனத்தையே விற்கும் மோசமான நிலைமைக்கு சுமந்திரனும், அவர் சார்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தள்ளப்பட்டுள்ளது.

நாங்கள் கடந்த-2010 ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் நாங்கள் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சமஷ்டிக்காக ஒருபோதும் உழைக்கப் போவதில்லை என்பதே ஆகும். பாராளுமன்றத் தேர்தல்களிலோ, மாகாணசபைத் தேர்தல்களிலோ, உள்ளுராட்சிசபைத் தேர்தல்களிலோ மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக கூட்டமைப்பு சமஷ்டியை வெறுமனே ஒரு கோஷமாகவே  பயன்படுத்தி வருகிறார்கள். தவிர கொள்கையளவில் அவர்கள் எக்காலத்திலும் சமஷ்டி அரசியலமைப்பிற்கு ஆதரவானவர்களில்லை.

கூட்டமைப்பினர் வல்லரசுகளிற்கு இணங்கி விட்டார்கள். மாகாண சபையில் சில திருத்தங்களை மேற்கொண்டு ஒற்றையாட்சிக்குள் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தத்திற்குள் தமிழர் அரசியலை முடக்குவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எப்போதோ விலை போயிருக்கிறார்கள் என்ற விடயத்தை நாங்கள் தொடர்ச்சியாக எங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தி வந்தோம். ஆனால், மக்கள் எங்களை நம்பவில்லை.

கடந்த-2017 ஆம் ஆண்டில் வெளிவந்த அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை ஊடாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டாதென்பது சட்ட நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மிகத் தெளிவாக விளங்கி விட்டது. ஆனால், சட்ட நுணுக்கம் விளங்காத சாதாரண மக்களுக்கு  அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையிலுள்ள  ஒற்றையாட்சி விடயங்கள் விளங்கியிருக்கும் என்பது கேள்விக்குறியாகவிருந்து வந்தது.

தமிழரசுக் கட்சி ஒரு பழமையான கட்சியாகக் காணப்பட்டமையாலும், அந்தக் கட்சியின் கொள்கை ஆரம்பத்திலிருந்து சமஷ்டிக் கொள்கையாகவிருந்த காரணத்தாலும், பேச்சுவார்த்தை காலத்தில் விடுதலைப்புலிகளும் சமஷ்டிக்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்தமையாலும், அதே நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் போருக்குப் பின்னர்  தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பதிவு செய்துள்ளமையால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இறுதிவரை சமஷ்டியைக் கைவிட மாட்டார்களென எமது மக்கள் நம்பினார்கள். ஆனால், தற்போது கூட்டமைப்பின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் உண்மையான முகங்கள் அம்பலமாகி வரும் சூழலில் பொதுமக்களுடைய பார்வை எங்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இணுவில் பகுதியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் கிளை அலுவலகமொன்று திறந்து வைக்கப்பட்டமை முக்கியமானதொரு விடயம். எங்கள் மக்களைச் சந்திப்பதற்கு நாம் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இதன் மூலமே எங்கள் அரசியற் செயற்பாடுகள் அடிமட்டத்திலுள்ள மக்கள் வரை சென்றடையும். தமிழ்மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதற்கு இனியும் நாங்கள் இடமளிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டு உரையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது