ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்கும் கங்கணத்துடன் இலங்கை!

ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை ஈட்டும் கங்கணத்துடன் சிங்கப்பூரில் நாளை (செப்டெம்பர் 1) ஆரம்பமாகும் 11 ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.

சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப் உள்ளக அரங்கில் நாளைமுதல் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எம்.1 ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் (சம்பியன்ஷிப்) போட்டிகளில் 12 நாடுகள் பங்குபற்றுகின்றன.

அதிக தடவைகள் சம்பியனான இலங்கை (1989, 1997, 2001, 2009), மூன்று தடவைகள் சம்பியனான சிங்கப்பூர், இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை வென்றெடுத்த நடப்பு சம்பியன் ஆகியவற்றுடன் மலேசியா, ஹொங்கொங், இந்தியா, ஜப்பான், மாலைதீவுகள், சைனீஸ் தாய்ப்பே, தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், புருணை ஆகிய நாடுகள் நான்கு குழுகளில் போட்டியிடுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில் முதல் சுற்றில் பாரிய சவால் இருக்காது என்றே கருதப்படுகின்றது. ஆனால் இரண்டாவது சுற்றில் இலங்கைக்கு பாரிய சவால் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் சுற்றில் பி குழுவில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

‘‘முதல் சுற்றில் சைனீஸ் தாய்ப்பே, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக 100 கோல்களுக்கு மேல் போடுவதே இலங்கை அணியின் இலக்கு. ஆனால் இரண்டாம் சுற்றில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் எமக்கு பெரும் சவாலாக விளங்கும். இந்த இரண்டு நாடுகளும் எமக்கு காலம்காலமாக பலத்த சவாலாக இருந்துவந்துள்ளன.

எனவே இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான போட்டிகள் குறித்தே நாம் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளோம். இந்த இரண்டு போட்டிகளிலும் சிறந்த வியூகங்களை அமைத்து விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்’’ என இலங்கை வலைப்பந்தாட்ட அணி பயிற்றுநர் திலகா ஜினதாச இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் தெரிவித்தார்.

‘‘எமது பயிற்சிகள் வெற்றி அளித்துவருகின்றன. வீராங்கனைகளினது ஒழுக்கமும் உயர்வாக இருப்பதுடன் அவர்கள் அர்ப்பணிப்புடனும் பெரு முயற்சியுடனும் விளையாடி வருகின்றனர். மலாவி வலைபந்தாட்ட சுற்றுப்பயணத்தின்போது வீராங்கனைகளின் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. எமது அணியில் முதல் எழுவரும் சரி, மாற்று வீராங்கனைகளாக இடம்பெறும் விராங்கனைகளும் சரி திறமையாக விளையாடக் கூடியவர்கள். இப் போட்டி உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிக்கான ஆசிய தகுதிகாண் சுற்றாகவும் அமைவதால் கடும் போட்டி நிலவும் என்பதை நான் அறிவேன். ஆனால் எமது அணியை ஆசிய சம்பியனாக்குவதே எனது குறிக்கோள்’’ என திலகா ஜினதாச மேலும் கூறினார்.

அணித் தலைவி தெரிவிக்கையில்,

‘‘கடந்த காலங்களைவிட இம்முறை எமது அணி சிறந்த நிலையில் இருக்கின்றது. பயிற்றுநர் திலகா ஜினதாசவிடம் ஏழு மாதங்களாக தொடர்ந்து பெற்ற பயிற்சிகள், மலாவியில் பங்குபற்றிய பயிற்சிப் போட்டிகள் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் என்பன எமக்கு நம்பிக்கையை ஊட்டியுள்ளன. எமது அணியில் அனுபசாலிகளுடன் துடிப்புமிக்க இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர். எனவே ஆசிய கிண்ணத்தை வென்றெடுக்க கடுமையாக முயற்சிப்போம்’’ என சத்துராங்கனி தெரிவித்தார்.

பங்குபற்றும் அணிகளின் குழுக்கள்

ஏ குழு: மலேசியா, ஜப்பான், மாலைதீவுகள்.

பி குழு: இலங்கை, சைனீஸ் தாய்ப்பே, இந்தியா.

சி குழு: சிங்கப்பூர், புருணை, பாகிஸ்தான்.

டி குழு: ஹொங்கொங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்.

இலங்கையின் போட்டிகள்

(முதல் சுற்று)

எதிர் சைனிஸ் தாய்ப்பே (செப்.1)

எதிர் இந்தியா (செப். 2)

இலங்கை அணி

சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அமரவங்ஷ, நௌஷலி ராஜபக்ஷ, துலாங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, ஹசிதா மெண்டிஸ், எழிலேந்தி சேதுகாவலர்.

Allgemein