August 10, 2022

திடீரென தீப்பற்றி எரிந்த பயணிகள் பேருந்து: அலறியடித்து ஓடிய பயணிகள்,

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில், பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Brünig Pass பகுதியின் A8 சாலை வழியாக நேற்று பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.
Interlaken என்ற நகரை நோக்கி சென்ற அந்த பேருந்தின் ஓட்டுனர், பேருந்திலிருந்து திடீரென் கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பேருந்தின் வேகத்தை குறைத்த ஓட்டுனர், அப்பகுதியில் ரயில்கள் பயணிக்கும் சுரங்கப்பாதைக்கு மேல்புறம் பேருந்தை அவசரமாக நிறுத்தினார்.
பின்னர், பேருந்தில் இருந்த பயணிகளை நோக்கி உடனடியாக பேருந்தை விட்டு வெளியேறுங்கள் என கத்தியுள்ளார். இதனிடையில், பேருந்தின் பின்புறம் தீப்பற்றியுள்ளது.
தீ ஜுவாலைகளை கண்ட பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்திலிருந்து குதித்து ஓடினர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய உடன், பேருந்து முழுவதும் தீ ஜுவாலைகள் பரவ தொடங்கியது.
ஓட்டுனர் அளித்த தகவலை தொடர்ந்து 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது.
தீவிபத்து குறித்து தகவல் வெளியிட்ட பெர்ன் மண்டல பொலிசார், பேருந்தில் ஏற்கனவே எரிபொருள் தீர்ந்திருந்ததாகவும், சில தொழில்நுட்ப காரணங்களால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.
இருப்பினும், தீவிபத்திற்கான உறுதியான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்துகள் அதிகமாக செல்லும் முக்கிய சாலையில் தீவிபத்து ஏற்பட்டதால், இரு வழித்தடங்களையும் தற்காலிகமாக மூடிய பொலிசார் எரிந்து சாம்பலான பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தின் ஓட்டுனர் சரியான தருணத்தில் தீவிபத்தை கண்டறிந்து பயணிகளை வெளியேற்றியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.