August 8, 2022

தையிட்டி விகாரை:மைத்திரியின் ஆசீர்வாதத்துடனேயே?

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தையிட்டிப் பிரதேசத்தில் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி தெற்கு பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை என்னும் பெயரில் புதிதாக விகாரை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை அடிக்கல்லை நாட்டியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே அடிக்கல் நாட்டப்படது.
வலி வடக்கின் மயிலிட்டி மீன்படித் துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால யாழ் வந்திருந்தபோது பௌத்த விகாரை குறித்து ஆளுநர் ரெஜினோல்ட் கூரே விளக்கமளித்துள்ளார்.
அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் கடந்த ஒரு வருடமாக தாம் வாழ்ந்து வந்ததாகவும், தமது வீட்டுக் காணிகளில் இருந்து வெளியேறுமாறு இலங்கைப் படையினரும் பௌத்த குருமார் சிலரும் தங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
1948 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை இராணுவம் இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடனேயே பௌத்த விகாரைகள், சிங்களக் குடியேற்றங்கள் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் பலாத்காரமாக அமைக்கப்பட்டு வந்தன.
ஆனால், 2015ஆம் ஆண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நேரடியாகவே தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவ ஒத்துழைப்புடனும் இலங்கை அரசின் அங்கீகாரத்துடனும், ஆனால் பலாத்காரமாகவும் பௌத்த விகாரைகள், சிங்களக் குடியேற்றங்களை அமைத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பௌத்த விகாரைக்காக அடிக்கல் நாட்டும் விழாவில் இலங்கை அமைச்சர்கள். இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் உட்பட பௌத்த சிங்கள மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு இலங்கை அரசாங்கம் அழைத்திருந்தது.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த இந்தப் பிரதேசத்தில் பௌத்தர்களே இல்லாத நிலையில், இந்த விகாரையை அமைப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ரெஜனோல்ட் கூரே அதற்குரிய ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக அந்த மண்ணில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை வெளியேற்றி விட்டே இந்த விகாரை அமைக்கப்படுகிறது. அவ்வாறு விகாரை அமைப்பதற்குரிய எந்தவித அனுமதிகளும் சட்டத்திற்கு அமைவாகப் பெறப்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி இலங்கை அரசாங்கம் என்பது தங்களுடைய ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காமல், அந்தச் சட்டத்திற்கும் முரணாக இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்டபுடன் பலாத்காரமாக பௌத்த விகாரை அமைப்பது பெரும் அநீதி என்று மக்கள் வேதனையடைந்துள்னனர்.
அதேவேளை, மிகவும் இரகசியமாகவும் அவசர அவசரமாகவும் பௌத்த விகாரை அமைப்பதன் நோக்கம் தொடர்பிலும் சந்தேகம் மக்கள் வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் அந்தக் காணியில் குடியிருந்த மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் அந்த விகாரை அமைப்பது தொடர்பாக தற்போது பல்வேறு தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
கொழும்பில் உள்ள காணிப் பதிவாளரின் ஒத்துழைப்புடன் பொய்யான சத்தியக் கடதாசி ஒன்று தாயரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 1946 ஆம் ஆண்டு இந்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று இருந்ததாக பௌத்த பிக்கு ஒருவர் அந்தச் சத்தியக் கடதாசியைக் காண்பித்துக் கூறி வருகின்றார்.
அந்தச் சத்தியக்கடதாசியைக் காண்பித்து யாழ் அரச உயர் அதிகாரிகளை மிரட்டியுமுள்ளார்.
இந்த பௌத்த குருவின் பொய்யான தகவலை வடமாகாண ஆளுநர் ரெஜனோலட் கூரேயும் நியாயப்படுத்தியுள்ளார்.
ஆனால், அந்தப் பகுதியில் தாங்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தாகவும் அங்கு விகாரைகள் எதவுமே இருக்கவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
மேலும் தமக்கு காணி இல்லாததால் தற்போது விகாரை அமைக்கப்படு வரும் சுமார் 20 பரப்புக் காணியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் தாங்கள் 11 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் இதற்கான அனுமதிப் பத்திரங்கள் காணிப் பதிவாளர் நாயகத்தால் அன்று வழங்கப்பட்டிருந்ததாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் போர் காரணமாக 1990 ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வந்ததாகவும் இன்னும் சில பேர் குடும்பங்களாக இந்தியாவிற்குச் சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான நிலைமையிலையே 2017 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதாவும் கூறுகின்ற அந்த மக்கள், மீள்குடியமர்வின் போது மீளவும் தமக்கு வழங்கப்பட்ட காணிகளிலேயே குடியேற்றப்பட்டதாவும் தெரிவிக்கின்றனர்.
போரினால் வெளியேறிய 11 குடும்பங்களில் 5 குடும்பங்கள் மீண்டும் அதே இடத்தில் மீளக் குடியமர்ந்து ஒரு வருடமாகியுள்ளது.
ஏனைய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேறு இடங்களிலும் இன்றும் சிலர் இந்தியாவில இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையில் பல கஷடங்களுடன் கடந்த ஒரு வருடமாக தாம் வாழ்ந்து வந்ததாகவும், தமது வீட்டுக் காணிகளில் இருந்து வெளியேறுமாறு இலங்கைப் படையினரும் பௌத்த குருமார் சிலரும் தங்களைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது என்றும் ஆனாலும் வேறு காணியைப் பெற்றுத் தருவாதாக அதிகாரிகள் தம்மிடம் கூறியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது வேறு காணியொன்றை வழங்கியுள்ளதாகவும் ஆனாலும் முன்னர் இருந்த நிலப்பரப்பை விட குறைவான நிலப்பரப்பையே வழங்கியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மௌனமாக இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.