இலங்கையை சர்வதேச கூண்டில் ஏற்ற பிரிட்டனில் கையெழுத்து பெறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

 

பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டு வந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பிரித்தானியா பரிந்துரைக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதற்கான விவாதம் ஒன்றினை பிரிட்டன் பாராளுமன்றில் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் லண்டனில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கடந்த 26/08/2018 அன்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஈஸ்ட்ஹம் மஹாலட்சுமி ஆலய தேர்த்திருவிழாவின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டாளர்கள் மக்களிடம் கையெழுத்து சேர்க்கும் பிரச்சார பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது.
அதன் கீழ் இலங்கை அரசாங்கத்துக்குப் பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.
2017 மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று (34/1) நிறைவேற்றப்பட்டது.
இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது.
அதன் பிற்பாடும் ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்னமும் ஐநா பிரேரணையில் வழங்கப்பட்ட கோடபாடுகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பது போர்க்குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை தெட்டத்தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் 2019 நடைபெறவிருக்கும் ஐநா கூட்டத்தொடரில் UNHCR 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை ஸ்ரீலங்கா அரசு நிறைவேற்றத்தவறிய பட்சத்தில்
ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யும்படி பிரித்தானியா அரசாங்கத்தை வலியுறுத்தி
மனுவொன்றை சமர்ப்பிப்பதற்கான கையொப்பமிடும் நடவடிக்கைகளை பிரித்தானியாவின் பலபாகங்களிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது .

தாயகச்செய்திகள்