முல்லைதீவு போராட்டத்திற்கு நீதி, சமாதான ஆணைக்குழு ஆதரவு!

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ் மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் அதற்கெதிராக போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை அருட்திரு மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.அவர் தலைவராக உள்ள யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி, சமாதான ஆணைக்குழு குறித்த போராட்டத்தில் பங்கெடுக்குமெனவும் அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த கொக்கிளாய், நாயாறு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறிக்குடியேறிய தென்பகுதி மீனவர்களுக்கு அங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்து தொழில் செய்வதற்கான காணி உத்தரவுப் பத்திரங்களை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. இதனால் இங்கு பல தலைமுறைகளாக வாழ்ந்த தமிழ்மக்கள் காணியற்றவர்களாக்கப்பட்டுள்ளனர்.

 இதுவரையில் ஏறக்குறைய 2000எக்கர் காணிகள் மகாவலி அபிவிருத்தி சபையினால் கையளிக்கப்பட்டு 6000 தென்பகுதிக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுள் இப்பகுதியைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் எவரும் இல்லை. ஒரு புறத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களும், வயல் காணிகளும் விடுவிக்கப்படாதிருக்கும் போது மறுபுறத்தில் மகாவலி அபிவிருத்திச்சபையும் மக்களின் காணிகளை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் கபளீகரம் செய்கின்றது. இத்தனைக்கும் மகாவலி நீர் வவுனியா மாவட்டத்திற்கே இதுவரை வரவில்லை. வருகின்ற மகாவலி நீர் அநுராதபுர மாவட்டத்திற்கே போதாமல் இருக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இந்நீரில் ஒரு துளி தானும் வரும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆயினும் இத்திட்டத்தின் பெயரால் குடியேற்றங்கள் மட்டும் இடம் பெறுவது இப்பகுதியில் குடிப்பரம்பலை மாற்றி தமிழரின் விகிதாசாரத்தைக் குறைக்கும் அரசின் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கான முயற்சியென எண்ணத்தோன்றுகிறது.

 தொல்லியல் ரீதியாக வடபகுதியின் வரலாறுகளை மறைக்கும் அல்லது அழிக்கும் செயற்பாடுகளும் இங்கு இடம் பெறுகின்றன. இதன் ஒரு வெளிப்பாடாக செம்மலை தமிழ் கிராமத்தின் நீராவிப் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் தற்போது பௌத்த அடையாளங்கள் இருப்பதாகக் கூறி பாரிய விகாரை ஒன்றை அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் இவ்விடம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது எனவும் வரலாறு திரிபுபடுத்தப்பட்டு தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கலாநிதி பு~;பரட்ணம் போன்ற பல தொல்லியல் நிபுணர்கள் உள்ளனர். தொல்லியல் திணைக்களம் இவர்கள் போன்ற தொல்லியல் நிபுணர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றால் இதுபோன்ற உண்மை வரலாறுகளை மறைக்கும் அல்லது அழிக்கும் முயற்சிகள் இடம் பெறா.

 அண்மையில் அனைத்துலக ரீதியில் செய்மதிப்படங்களின் உதவியுடனும,; உலக நாடுகளின் வெப்பநிலை, மழைவீழ்ச்சி புள்ளி விபரங்களின் ஆதாரங்களுடனும் வெளிவந்த அறிக்கையில் இலங்கை பற்றிய அதிர்ச்சிகரமான உண்மை இலங்கைக் குடிமக்கள் எல்லோரையும் சிந்திக்கத்தூண்ட வேண்டும். அதன்படி காலநிலை மாற்றத்திற்கு மனித செயற்பாடுகள் (காடுகளை அழித்தல் போன்றவை) காரணமாயிருப்பதில் 97ம் இடத்தில் இருந்த இலங்கை தற்போது 4ம் இடத்திற்கு வந்துள்ளது. இது எவ்வளவு வேகமாக இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. என்றும் குறிப்பாக கடந்த 10 வருடங்களாக இவை வேகம்கண்டமையையும் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இதற்கு ஒரு காரணம் காடுகளை அழித்து இராணுவ முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டு பயனுள்ள மரங்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டமை மட்டுமல்ல மகாவலி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதையும் குறிப்பிடலாம். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை இதன் வெளிப்பாடே என்பதை நாட்டின் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எல்லோரும் உணர வேண்டும்.

எனவே மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை ஆகஸ்ட் 28ம் திகதி (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவில் மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியிலான கண்டனப் போராட்டத்திற்கு எமது முழு ஆதரவையும் வழங்குகின்றோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்து எல்லா தமிழ் மக்களையும் எல்லா நாட்டு மக்களையும் குறிப்பாக அரசியல்தலைவர்களையும், புத்திஜீவிகளையும் சிந்தித்து செயலாற்றத்தூண்ட வேண்டுமென இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்