வடக்கு முதல்வரின் கருத்திற்கு முன்னாள் போராளிகள் கண்டனம்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்தை வன்மையாக கண்டிப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிவகுமார் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் இணைந்து முன்னாள் போராளிகள் தமிழர்களை காட்டிக்கொடுப்பதாக அண்மையில் ஊடகங்களிடம் பேசிய முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”முன்னாள் போராளிகள் இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து தமிழ் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து செயற்படுவதாக இருந்தால், ஏன் தங்களுக்கு அவர்கள் மூலம் அச்சுறுத்தல் வரவில்லை. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது உரிமைகளையும், அரசியல் பலத்தையும் எதிர்வரும் மாகாணசபை தேர்தலின் மூலமாக எம்மிடம் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது பதிலை வழங்குவோம் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

தாயகச்செய்திகள்