கடற்புலிகளை அழிக்க வாஜ்பேய்தான் உதவினார்

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்து,  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை காலமான வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில், கையெழுத்திட்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“மிகச் சிறந்த பிரதமர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பன். எல்லா நேரங்களிலும் அவர் சிறிலங்காவின் பக்கம் நின்றார்.

முன்னர் நான் சிறிலங்காவின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருந்தனர்.

எமது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு வாஜ்பாய் உதவினார்.

இராணுவப் பயிற்சிகளை வழங்கினார். கடற்புலிகளை எம்மால் தடுக்க முடிந்தது என்றால், அது அவரால் தான். அவர் கடற்புலிகளுக்கு எதிராகப் போரிட எமக்கு உதவினார்.

நான் வாஜ்பாயை 1975ஆம் ஆண்டில் முதல்முறையாகச் சந்தித்தேன். அதன் பின்னர் அவர் 1977ஆம் ஆண்டு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரானார். அப்போது நான் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்தமையால், அவருடனான நட்புறவு வலுத்தது.

இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை எனக்குத் தந்திருந்தார். நாங்கள் தொடர்ச்சியாக நண்பர்களாக இருந்தோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Allgemein