நானா வழக்குப்போட்டேன்:முதலமைச்சர் கேள்வி!

தன்னால் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றமையை முதலமைச்சர் நிராகரித்துள்ளார். அவைத்தலைவர் ஆளுநருடனும் என்னுடனும் சமாதானம் பேச வந்ததாகவும் உச்ச நீதிமன்ற வழக்கின் அடுத்த தவணை செப்ரெம்பர் மாதத்திற்குச் சென்றுள்ளதால் அதுவரை அமைச்சர் அவை சந்திக்க முடியாதென்று கூறப்படுகிறதேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள முதல்வர் முதலில் போடப்பட்ட வழக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்து வழக்கு திரும்பவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒரு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்த முடியாததாகவுள்ளது. ஆகவே அது பற்றிய மேன்முறையீடு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. அங்கு காரணங்கள் கூறப்பட்டு தற்போது செப்ரெம்பர் மாதத்திற்குத் தவணை போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கைப் பற்றிப் பல பத்திரிகைகளும் வலைத்தளங்களும் தாம் நினைத்த நினைத்தவற்றைக் கூறி வருகின்றனர். என்னிடம் கருத்தறிய இந்தக் கேள்வியைக் கேட்டமைக்கு முதலில் எனது நன்றிகள் உரித்தாகுக!
முதலில் பிரச்சினையை விபரிக்கின்றேன்.
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினேன். அதுபற்றி ஆளுநருக்கு அறிவித்து அவருக்குப் பதிலாகவும் இன்னொரு அமைச்சருக்குப் பதிலாகவும் இரு புதிய அமைச்சர்களை நியமிக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன். என் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கௌரவ டெனீஸ்வரன் நீக்கப்பட்டு அவர் இடத்திற்கும் மற்றோர் அமைச்சர் இடத்திற்கும் இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். அரச அலுவலர்கள் சார்பான நியமனங்களும் பதவி நீக்கங்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கின்றது. அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கல் பற்றியும் அவ்வாறான ஒரு விதி இருக்கின்றதோ தெரியாது. அது பற்றி நான் ஆராயவில்லை. ஆனால் அமைச்சர் நியமனங்களும் பதவி நீக்கல்களும் ஆளுநரால் வர்த்தமானியில் பிரசுரிப்பது ஒரு வழக்கமாகிவிட்டது. கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கத்தை ஆளுநர் ஏற்று புதிய அமைச்சர் ஒருவரை அவர் இடத்திற்கு நியமித்திருந்தாலும் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி நீக்கம் வர்த்தமானிக்கு பிரசுரிக்க அனுப்பப்படவில்லை. இதை ஆளுநரே அண்மையில் ஏற்றுள்ளார். அந் நீக்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பதை ஏற்றிருக்கும். அவ்;வாறு பிரசுரிக்காததால் மேன்முறையீட்டு நீதிமன்றம் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தல்கள் ஏதும் வெளிவராததால் அவர் தொடர்ந்து பதவியில் இருந்து வருகின்றார் என்று முடிவெடுத்து ஆளுநரே பதவி நீக்கம் செய்ய வல்லவர் என்று கூறி சட்டப்படி ஐந்து அமைச்சர்களே இருக்க வேண்டிய இடத்தில் தற்போது கௌரவ டெனீஸ்வரனுடன் சேர்த்து ஆறு அமைச்சர்கள் இருப்பதால் நியமன அதிகாரம், நீக்கும் அதிகாரம் கொண்டவர் (ஆளுநர்) உரிய நடவடிக்கை எடுத்து சட்டப்படி ஐந்து அமைச்சர்கள் அமைச்சர் அவையில் இடம் பெற ஆவன செய்ய வேண்டும் என்று தீர்மானம் அளித்தது.
இதில் கவனிக்க வேண்டியவை பின்வருவன –
அரசியல் யாப்பின் உறுப்புரை 154கு(5) பின்வருமாறு கூறுகின்றது (ஆங்கிலத்தில் இருந்து எனது மொழிபெயர்ப்பு) “மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும்”.
இந்த உறுப்புரையில் பதவி நீக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. வேறெங்கேயுந் தானும் அதுபற்றிப் பிரஸ்தாபிக்கப்படவில்லை.
தற்போதைய அமைச்சர்களான கௌரவ கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள், கௌரவ அனந்தி சசிதரன் அவர்கள், கௌரவ வைத்திய கலாநிதி குணசீலன் அவர்கள் மற்றும் கௌரவ சிவநேசன் அவர்களும் எனது சிபார்சின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு அவர்களின் நியமனங்கள் வர்த்தமானியிலும் முறையாகப் பிரசுரிக்கப்பட்டன. அவர்கள் நால்;வரும் சட்டப்படி நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சர்கள். தற்போது கௌரவ டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரின் பதவி விலக்கைச் செய்யக் கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் என்னையுஞ் சேர்த்து முறைப்படி நியமிக்கப்பட்ட ஐந்து அமைச்சர்கள் இருக்க, மேலும் ஒருவரை (கௌரவ டெனீஸ்வரன் அவர்கள்) அமைச்சர் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அத்துடன் பதவி நீக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டுள்ளது. அவ்வாறெனின் அந்த அதிகாரம் முதலமைச்சரிடம் இல்லை என்பதே மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம்.
ஆகவே ஐந்து பேர்களைக் கொண்ட அமைச்சரவையே எமது மாகாண சபைக்கு சட்டப்படி அமைய வேண்டும் என்பதால் நியமிக்கும் உரித்துடையவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்கள் தீர்மானப்படி அந்த அதிகாரம் ஆளுநரையே சாரும். எனக்கு பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என்றே மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆகவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல. ஆகவே உரியவாறு ஆறை ஐந்தாக்குவது ஆளுநரையே சாரும். என்னை எவரும் குறை கூற முடியாது. நான் எவரையாவது பதவி நீக்கம் செய்ய உரித்தற்றவராக மேன்முறையீட்டு நீதிமன்றினால் காணப்பட்ட பின் அது பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுக்க நான் விழைந்தால் மன்றை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகலாம்.
நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர்.
நடந்த சிக்கலை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி சரிசெய்ய வல்லவர் ஆளுநர் ஒருவரே. கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் அமைச்சராகக் கடமையாற்றுவதற்கு தற்போதிருக்கும் அமைச்சர்கள் நால்வரில் ஒருவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அதனை ஆளுநர் ஒருவரே செய்யலாம். மேன்முறையிட்டு நீதிமன்றத் தீர்மானப்படி அவரே பதவி நீங்கம் செய்ய அதிகாரம் உடையவர். முதலமைச்சர் அல்ல.
என்னுடைய கைகள் மட்டுமல்ல மேற்படி தீர்மானத்தால் ஒன்பது மாகாண முதலமைச்சர்களின் கைகளும் கட்டப்பட்டுள்ளன. அரசியல் யாப்பினால் முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உரித்தொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடைசெய்யப்பட்டு அது ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடமாகாண சபை தன் நடவடிக்கைகளைச் சட்டப்படி கொண்டு நடத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் மக்கள் வழங்கிய ஜனநாயக அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றத்தால் நாட்டிலுள்ள சகல மாகாண சபைகளிலும் முடக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மனம் வைத்தால்த்தான் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். இது பற்றி ஆளுநருடனும் என்னுடனும் கௌரவ அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் பேசியது உண்மைதான். தற்போதிருக்கும் ஆறு அமைச்சர்களையும் தத்தமது பதவிகளில் இருந்து இராஜிநாமாச் செய்த பின் ஐந்து அமைச்சர்களை மட்டும் நியமிக்குமாறு ஆளுநரிடம் கோரலாம் என்று அவரால் அறிவுரை வழங்கப்பட்டது. ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டியவர் சட்டத்துறைத் தலைமையதிபதி. அவரின் கருத்தன்று இது. கௌரவ அவைத்தலைவரின் மேற்படி அறிவுறுத்தலின் தாற்பரியத்தினை இப்பொழுது அறியப் பார்ப்போம்.
ஒன்று பதவி நீக்கப்பட்ட கௌரவ டெனீஸ்வரனை ஒரு அமைச்சராக ஏற்று சகலரும் இராஜினமாச் செய்ய வேண்டும் என்று கூறும் போது சென்ற பதினொரு மாதங்களும் கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் பதவி வகித்தார் என்றாகிவிடும். அவர் வேலை ஏதும் செய்யாமலே தனது 11 மாத சம்பளத்தைத் தருமாறு கோரலாம். அதற்குரிய பணம் தற்போதைய அமைச்சர்களுக்குக் கொடுத்தாகிவிட்டது.
இரண்டு அவரை அழையாது அவர் பங்குபற்றாது அமர்ந்த அமைச்சரவையின் தீர்மானங்கள் சட்டப்படி வலுவானவையா என்ற கேள்வி எழும்.
கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தமக்கு குறித்த பின்சம்பளம் வேண்டாம் என்றால்க் கூட அவரில்லாமல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்களை வலுவற்றதாக்க, பாதிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர் அவைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதை நான் கௌரவ அவைத்தலைவர் திரு சீ.வீ.கே.சிவஞானம் அவர்களிடம் எடுத்துரைத்து ஆளுநர் வேண்டுமெனில் சென்ற ஆகஸ்ட் 20ந் திகதியன்றிலிருந்து வலுவுடையதாக வரும் விதத்தில் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவிநீக்கம் பற்றி வர்த்தமானியில் இப்பொழுதும் பிரசுரம் செய்யலாம் என்றேன்.
எனது சிபார்சை அப்போதே 2017ம் ஆண்டு ஆகஸ்டில் ஏற்று கௌரவ டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கி அவர் இடத்திற்கு வேறொரு அமைச்சரை முறைப்படி நியமித்த அவர், குறித்த பதவி நீக்கத்தை வர்த்தமானியில் பிரசுரிக்காததால்த்தான் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றம் கண்டுள்ளது. வர்த்தமானியில் குறித்த பதவி நீக்கம் அப்போதே வந்திருந்தால் இந்தச் சிக்கல்கள் எவையும் எழுந்திரா. இப்பொழுது கூட தன்னுடைய அந்தத் தவறை ஆளுநர் திருத்திக் கொள்ளலாம். தாம் பிரசுரிக்கத் தவறி விட்டார் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆகவே பதவி நீக்கம் பற்றி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி ஆளுநருக்கு அறிவுரை வழங்க நான் அருகதையற்றவன். அதனால்த்தான் நான் உடனே மேன்முறையீட்டு தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் நடவடிக்கைகளை எடுத்தேன். சட்டத்தின் தாமதங்கள் (டுயறள னுநடயலள) இங்கும் ஏற்பட்டு எம்மை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.
வேண்டுமெனில் முதலமைச்சர் தவிர்ந்த யாரேனும் ஒரு அமைச்சரை ஆளுநர் நீக்கட்டும். நீக்கி கௌரவ டெனீஸ்வரனை அமைச்சர் அவையில் சேர்க்கட்டும். ஆனால் சட்டப்படி முறையாக நியமிக்கப்பட்டு பின் பதவி நீக்கம் செய்யப்படுகின்ற அந்த அமைச்சர் நீதிமன்றத்திற்குச் செல்வார். அதனையும் ஆளுநர் கருத்தில் கொள்வார் என்று நினைக்கின்றேன்.
என் அறிவுப்படி அமைச்சராக ஒருவரை உறுப்பினர் மத்தியில் இருந்து நியமிப்பதோ பதவி நீக்கம் செய்வதோ முதலமைச்சரின் உரித்தும் அதிகாரமும் ஆகும். அதற்கு உத்தியோகபூர்வ வடிவம் கொடுப்பது மட்டும் ஆளுநரைச் சாரும். ஆனால் உத்தியோகபூர்வ வடிவம் கொடுக்கத் தவறியதால் முதலமைச்சரின் உரித்து எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு உத்தியோகபூர்வ கடப்பாட்டுக்கும் உண்மையான உரித்துக்கும் இடையில் இருக்கும் வேற்றுமையை எடுத்துரைக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கின்றது. ஒரு நிர்வாகச் செயற்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்ட உரித்தாகக் கருதி அளித்த தீர்மானம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வரையில் எமது நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்படத்தான் செய்யும். சட்டத்தின் தாமதங்களில் இந்த வழக்கும் அடங்குகின்றதென வடக்கு முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தாயகச்செய்திகள்