தேனீ வளர்ப்பில் சாதித்து வரும் யாழ்ப்பாணத்து பொறியியல் மாணவன் – காணொளி இணைப்பு

பொறியியல் மாணவரான சிவகுமாரன் நிரோஷன் யாழ்ப்பாணத்தில் தேனீ வளர்ப்பில் சிறந்து விளங்குகிறார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்டையில் தோற்றிய பின்னர், வீட்டின் ஏழ்மையைப் போக்கும் நோக்கில் தேனீ வளர்ப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.

பின்னர், கடந்த சில வருடங்களாக அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

யாழ் – காரைநகர், தங்கோடை கிராமத்தைச் சேர்ந்த நிரோசன், தனது வீட்டிலும் உறவினர்களின் வீடுகளிலுமாக தற்போது 53 தேன் கூடுகளை வைத்து பராமரித்து வருகின்றார்.

ஆரம்பத்தில் தேனீக்களின் கொட்டிற்கு ஆளானதாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட வேண்டாம் என எதிர்மறையான அறிவுறுத்தல்கள் வந்ததாகவும் நிரோசன் குறிப்பிட்டார்.

எனினும், தற்போது தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுவரும் அவர், ஏனையவர்களுக்கு அது தொடர்பான பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.

தேனீ வளர்ப்பிற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கூடுகளில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ, கொசுகுத் தேனீ மற்றும் பொந்துத் தேனீ என 4 வகையான தேனீகளை இவர் வளர்த்து வருகிறார்.

மரங்களும் பூக்களும் அதிகளவில் காணப்படும் இடங்களிலேயே தேனீ கூடுகளை வைக்க வேண்டும் என நிரோஷன் தெரிவித்தார்.

சிறப்பாக தேனீ வளர்ப்பில் ஈடுபடும் நிரோஷன் யாழ். மாவட்ட விவசாய திணைக்களம் ஊடாக தேனீ வளர்ப்பு தொடர்பில் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயிலும் பொறியியல் மாணவரான நிரோஷன், மாதாந்தம் 15,000 தொடக்கம் 20,000 வரையான வருமானத்தை ஈட்டுகின்றார்.

தனது முயற்சியால் வருமானம் ஈட்டுவதுடன், கல்வி செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றார்.

தாயகச்செய்திகள்