வேலணையூர் பொன்னண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

வேலணையூர் பொன்னண்ணா மறைந்தார் எனும் செய்தியை நண்பர் எஸ்.கே.ராஜன்
தொலைபேசியில் தெரிவிக்க,அவரோடு பழகிப் பேசிய நாட்கள் நினைவைத்தொட்டு
கண்ணீரை வரவைக்கிறது!
என்னைப் பொன்னண்ணாவுக்கு அறிமுகம் செய்து,”பனிமலை தாண்டிய பாதச் சுவடுகள்”
எனும் அவரின் நூல் அறிமுக விழாவிற்கு எனது
அலுவலகம் வரை வந்து அழைப்பு விடுத்த அருமை
நண்பர் பேர்னில் வாழும் ஆனந்தன் அவர்களோடு பொன்னண்ணா நினைவுகளைப்
பகிர்ந்து கொண்டேன்.
ஆம்,16.06.2012 இல் பொன்னண்ணாவின் நூலின் அறிமுக விழா பேர்ணில் மண்டபம்
நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவு பெறுகிறது.
பொன்னண்ணா பாசல் நகரில் சிலநாட்கள்
தங்கியிருந்த போது,அவரை அழைத்துக்கொண்டு ஜேர்மானிய எல்லை நகர் உணவகம் சென்று மதிய
உணவுடன் வயிறாறி அவருடைய எழுதப்படாத மேலும் பல கதைகள் பேசி
மகிழ்கிறோம்.
பொன்னண்ணா பல முறை டென்மார்க் அழைத்தும் செல்ல முடியவில்லை,ஆனால்,இனி அழைப்பதற்கு
அவர் இல்லை.
இந்த ஆண்டும் அவருடன் தொலைபேசியில்
பேசினேன்.ஆனால்,அதுதான் அவரோடு பேசிய கடைசி உரையாடல் என்று புரியாமல்
போயிற்று,இறுதியாக டென்மார்க் துரையின்
நூல் வெளியீட்டை முகநூல் வழியே பார்க்கையில் அவர் நோய்யுற்றுள்ளார்
என்று உணர்ந்து கவலை கொண்டேன்.
அவர் தமிழுக்குப் படைத்த பத்து நூல்களின்
உழைப்புக் கருதி எமது நிறுவனத்தால்
வாழும்போதே அவரை வாழ்த்தி வித்தகன் சுரேஷ் வாசித்தளிக்க “நிறை தமிழ்”
எனும் பட்டம் வழங்கிக் கெளரவித்தோம்
என்பதே சிறு நிறைவாகவும்,அவர் இல்லை எனும் உலகு பெருங் குறைவாகவும் இன்று
தோன்றுகிறது.
பொன்னண்ணா மேகங்களுக்குள் உறங்குங்கள்,ஒருநாள் அங்கே வந்து
உங்களைச் சந்திக்கும் வரை அமைதியாக
உறங்குங்கள்.அவர் பிரிவால் வாடும் அனைவருக்கும் எமது துயராழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

கண்ணீருடன்
-கல்லாறு சதீஷ் –