மூன்று தசாப்த கால யுத்தம் தமிழ் மக்களின் உரிமை, தனித்துவம், தேசிய அடையாளம்-சந்திரிகா!

நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவசியம் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது புதிய அரசியலமைப்பின் மூலமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற சர்வமதப் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சர்வமத நல்லிணக்கத்தின் மூலம் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம், சமாதானம் என்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் மூன்று தசாப்த காலம் ஓர் இனம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள யுத்தம் செய்தது எனவும் யுத்தம் தமிழ் மக்களின் உரிமை தனித்துவம், தேசிய அடையாளம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இடம்பெற்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டம் முதலில் சமாதானமாக ஆரம்பித்து பின்னர் யுத்தமாக உருவெடுத்து நாட்டின் பாரிய அழிவுக்கு வழிவகுத்தது எனத் தெரிவித்த அவர்,
அந்த வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாமைக்கு காரணம் கடந்த கால அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளே என தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகள் இல்லாமற் போவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம் எனவும் எந்த இனத்துக்கும் தமது மொழி, தமது மதம், தமக்கான சுதந்திரம், தனித்துவம் மிக அவசியமானதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள பௌத்த மக்களுக்கு எந்தக்குறைபாடும் ஏற்படப் போவதில்லை.
மாறாக பெளத்தமே பெருமை பெறும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவசியம் எனவும் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தோ அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தோ அதற்கு வழிவகுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புதிய அரசியலமைப்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுவதனால் அதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.