இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றத் தயாராகும் மூதாட்டி

 

அண்மையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் தான் அப்பதவிக்கு வரத் தயாராக இருப்பதாக 71 வயதுடைய மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார்.
கலாவத்தை, ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய எல்.பி. கருணாவதி என்ற மூதாட்டியே அலுகோசு பதவிக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் போதைவஸ்தை இல்லாதொழிக்க வேண்டும். அத்துடன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
நாட்டில் மரண தண்டனை வழங்குவதற்குரிய அலுகோசு பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றது. இதற்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் எவரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன.

பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனை போன்றவற்றை முற்றாக தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கின்றேன் என மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எவரும் இந்த பதவிக்கு வராமையால் தான் இவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன எனவும் எனவே தான் அப்பதவிக்கு வந்து குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தவுள்ளதாகவும் தனக்கு எவ்வித சம்பளமும் தேவையில்லையெனவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.

Allgemein