முன்வரிசையினை விட்டுக்கொடுக்க தயாராக சிவாஜி!

அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச்சு துறைகளை வகிக்கும் அமைச்சர்களான க.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அவற்றை மீளவும் டெனீஸ்வரனிடம் கொடுப்பதுடன் அமைச்சர்கள் இருவரின் ஒருவர் தமது அமைச்சு பொறுப்பை மீள வழங்க வேண்டுமென தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தவன் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வில் நிமிடத்திற்கொரு தடவை குறுக்கிட்டு சயந்தன் பேசிக்கொண்டேயிருக்க அவைத்தலைவரும் ரசித்துக்கொண்டேயிருந்தார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபை உள்ள போது ஆளுநர் சுயமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட கூடாது. இந்த விடயத்தை இந்த சபை மிக மேலான விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சயந்தன் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் செயற்பாடு கட்சி ரீதியானது அல்ல. அவருடைய தனிப்பட்ட செயற்பாடாகும் என கூறினார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் ஆளுநர் மாகாண அமைச்சர்கள் 4 பேரும் யார்? என உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அதனை மறுத்த முதலமைச்சர் அவ்வாறு எதுவும் தன்னிடம் கேட்கப்படவில்லை என்றார். தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு முன் வரிசை ஆசனம் தேவையாக இருந்தால் எனது ஆசனத்தை தருகிறேன். அவருக்கு கொடுங்கள் என கூறினார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தனிப்பட்ட ஒருவருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஆசனத்திற்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல என கூறினார்.

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், இங்கு நடைபெற்ற விடயங்களை நான் நிச்சயமாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் தானே தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாகவும், தனக்கு அமைச்சர்களுக்குரிய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் படியும், நாம் இருட்டு நிலையில் இருக்கிறோம். என்பதையும் ஆளுநருக்கு கடிதத்தில் எழுதியுள்ளேன். அதற்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

மேலும் உத்தியோக பூர்வமாக இந்த விடயம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியப்படுத்தப் படவில்லை. ஆகவே நாம் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவோ, மறுதலிப்பதாகவே அர்த்தப்படாது என கூறியதுடன் ஆளுநரின் பதிலை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறியிருந்தார்.

தாயகச்செய்திகள்