குடும்பத்துக்குள் இழுபறி நிலையா..? போட்டுடைத்த மகிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரை அமெரிக்கா ஆதரிக்காது என, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2019 அதிபர் தேர்தலில், போட்டியிடுவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் தகுதியற்ற தன்மை அல்லது பொருத்தமற்ற தன்மையை பற்றி, அதுல் கேசாப் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை.
இது எமக்கிடையிலான ஒரு தனிப்பட்ட கலந்துரையாடலாக இருந்தது, இதன்போது, அரசியல் பற்றியோ அல்லது எனது சகோதரர் பற்றியோ பேசப்படவில்லை.
ஊடகங்கள் தான் இதனை ஊதிப் பெருப்பித்தன. இதனைப் பற்றி நானோ, சிறிலங்கா பொதுஜன முன்னணியே கவலைப்படவில்லை.
அதிபர் தேர்தலை 2019 ஜனவரியில் நடத்துவதற்குக் கூட, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் உள்ளது.
அவ்வாறு அவர் அறிவித்தால், 2018 இறுதியிலோ, 2019 ஆரம்பத்திலோ எமது வேட்பாளரை அறிவிப்போம் என்று கூறினார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள், கோத்தாபயவுக்கும், பசிலுக்கும் இடையில் இழுபறிப் போர் நடப்பதாக வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein